அரசியல் ஆடுகளம்: பாஜகவை வீழ்த்த திமுகவுடன் ரகசியமாக கைகோர்த்த அதிமுக?

By 
logo

பாஜகவை வீழ்த்த திமுகவுடன் ரகசியமாக அதிமுக கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டை அரை நூற்றாண்டு காலமாக திராவிட கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன. குறிப்பாக, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன. இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் மாறிமாறி கடுமையாக விமர்சித்து கொண்டாலும், மூன்றாவது கட்சிக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதே இதுவரையிலான நிலை. இதனையறிந்த தேசிய கட்சிகளும், மாநிலத்தின் இதர சிறிய கட்சிகளும் திமுக அல்லது அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வருகின்றன.

ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இருந்த வரையிலும் இதுதான் நிலை. அவர்கள் இருவரும் உடல்நலிவுற்ற போது, தமிழிசை தலைவராக இருந்தபோது, பாஜக மெல்ல தமிழ்நாட்டில் துளிர் விட தொடங்கியது. ஆனால், ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர், தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை நிரப்ப பலரும் முயற்சித்து தோல்வியடைந்தனர்; பலர் இன்னும் முயற்சித்து வருகின்றனர்.

வாரிசு அரசியல் என்று விமர்சிக்கப்பட்டாலும், திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையில் கட்டுக்கோப்பாக அக்கட்சியினர் ஒரு குடையின் கீழ் சென்று விட்டனர். ஆனால், ஜெயலலிதா தனது அரசியல் வாரிசை அறிவிக்காததால், அதிமுக சலசலப்புகளுக்கு உள்ளானது; இன்றும் உள்ளாகி வருகிறது. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டாலும், அவரால் ஜெயலலிதா போன்றதொரு ஆளுமையாக உருவாக முடியவில்லை. பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது;

சீனியர்களை அனுசரித்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கே அவருக்கு நேரம் சரியாக இருப்பதால், தேர்தல் அரசியலில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 6 தேர்தல்களிலும் அக்கட்சி தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது.

இதனை சரியாக பயன்படுத்தும் பாஜக தமிழ்நாட்டில் மெல்ல வளர்ந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜக பயணித்து வருகிறது. ஆனால், அதிமுக முதுகில் சவாரி செய்யும் பாஜக, அக்கட்சியை ஒழித்துக்கட்டி விடும் என அப்போதே அரசியல் விமர்சகர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். ஏன், அதிமுகவுக்குள்ளேயே அதுபோன்ற குரல்கள் ஒலித்தன. பாஜகவுடனான கூட்டணியால்தான் தோல்வியடைவதாக அதிமுகவினரே கூறினர். இருப்பினும், டெல்லி பாஜகவின் தயவு அதிமுகவுக்கு தேவை என்பதால் சுமூகமாக சென்றனர்.

ஆனால், அண்ணாமலை பதவியேற்றதற்கு பிறகு, இரு கட்சிகளுக்கும் இடையேயான டேர்ம்ஸ் சரியில்லை. அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே, தமிழ்நாட்டில் திமுக vs பாஜக என்ற நிலைதான் உள்ளதாக பாஜக மூத்த நிர்வாகிகள் கூறினர். கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக தமிழ்நாட்டில் தன்னை வளர்த்துக் கொண்டே வந்தது. இது அதிமுகவினருக்கு தெரிந்தும் பெரிதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என அக்கட்சியினர் மார்த்தட்டிக் கொண்டனர்.

ஆனால், இன்று நிலைமை வேறு விதமாக உள்ளது, மக்களவைத் தேர்தல் 2024 விரைவில் வரவுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு அடுத்து பாஜகதான் என கணித்துள்ளன. பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாகவே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவுக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், அதிமுகவால் ஒன்றும் செய்ய முடியாத நிலைதான் உள்ளது. ஓபிஎஸ் தனியாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை இணைத்து கூட்டனி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. நாளைக்கே பாஜகவை கடுமையாக எதிர்த்தால் கட்சி ஓபிஎஸ் கைகளுக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

பாஜகவின் இந்த வளர்ச்சி அதிமுகவுக்கு மட்டுமல்ல திமுகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பாஜகவை இப்படியே வளர விட்டால் அது பின்நாட்களில் தங்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை திமுகவும் நன்கு உணர்ந்துள்ளது. எனவே, பாஜகவின் வளர்ச்சியை தடுக்க அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் ரகசியமாக கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாகவே, இரு கட்சியை சேர்ந்த தலைவர்களின் நடவடிக்கையும் அதற்கு ஏற்றாற்போல் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரிதாக பேசப்பட்ட கொடநாடு வழக்கு முன்னேற்றம் இல்லாமல் உள்ளது; முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

அதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தீர்வு கிடைத்துள்ளது. அவரது கோரிக்கையை பரிசீலிக்க முதல்வர் ஸ்டாலின் சபாநாயகரிடம் தெரிவிக்கிறார், மறுநாள் இருக்கைகள் மாறுகின்றன. பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஓபிஎஸ் இரண்டாம் வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளார். கிளாம்பாக்கம் விவகாரத்தில் விமர்சிப்பதிலும், பதில் சொல்வதிலும் மென்மையான போக்கை முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் கடைப்பிடிக்கிறார்கள்.

“திமுக அரசை ஒரு கட்டத்திற்கு மேல் விமர்சிக்க முடியாது. ங்கள் இடத்திற்கு அதாவது ஆளுங்கட்சி வரிசைக்கு நாங்கள் வர வேண்டும். எதிர்க்கட்சி வரிசைக்கு நீங்கள் வர வேண்டும். வேறு சக்திகள் வருவதை தடுக்க வேண்டும்.” என அதிமுகவின் கே.பி. முனுசாமி பேசுகிறார். “தமிழகத்தை திமுக ஆள வேண்டும் அல்லது அதிமுக ஆள வேண்டும். மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது.” என செங்கோட்டையன் பேசுகிறார். “பாஜகவை தமிழகத்துக்கு உள்ளேயே விடக்கூடாது. அதிமுக நமக்கு பங்காளி. பாஜக பகையாளி” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு கூட்டத்தில் பேசுகிறார்.

இதுபோன்ற விஷயங்கள், பாஜகவின் வளர்ச்சியை தடுக்க அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளும் ரகசியமாக கைகோர்த்துள்ளதாக வெளியாகி வரும் தகவலை வலுப்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால், திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதுதான் அதிமுக என்பதை அக்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக என்பதனை அதிருப்தி திமுக என்றும் அழைப்பர்; அந்த அளவுக்கு திமுக எதிர்ப்பு பேசி வளர்ந்த கட்சி அதிமுக. அதனால், திமுகவுடன் கைகோர்த்தால் அது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, அதிமுகவின் அனைத்து தரப்பையும் ஒன்றிணைத்து பாஜக, திமுக ஆகிய கட்சிகளை எதிர்த்தால் மட்டுமே அதிமுகவால் வளர முடியும். அதேபோல், பாஜக, அதிமுக ஆகிய இருகட்சிகளையும் எதிர்த்தால் மட்டுமே திமுகவால் வளர முடியும். அதிமுக - திமுக ஆகிய கட்சிகளும் ஒருவரையொருவர் எதிர்ப்பதோடு, பாஜகவை பொது எதிரியாக வைத்து திராவிட சித்தாந்த்தின் வாசனையோடு, மாநில உரிமைகள் பேசினால் மட்டுமே பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்பதை இரு கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Share this story