அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது: தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்.?

By 
admkdmdk

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என இந்த முறை மும்முனை போட்டி நிலவவுள்ளது. திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லாமல் அப்படியே உள்ளதால், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக தலைமை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதேசமயம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. மேலும், எதிர்வரவுள்ள தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் நிறைவு செய்யவில்லை. அதற்கு காரணம், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க இரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதுதான். அதேபோல், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் அதிமுக, பாஜகவுடன் ஒரே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ராஜ்யசபா சீட், அதிக தொகுதிகளை கேட்பது உள்ளிட்ட காரணங்களால் கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை இருந்தது.

இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போன்றே, கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில், அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், பாமகவுடனும் அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக,  வருகிற 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this story