அம்பானி, அதானி விவகாரம்: பிரதமர் மோடிக்கு, ராகுல் பதிலடி..

By 
rahulji3

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தேர்தலுக்காக அம்பானி மற்றும் அதானியிடம் காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதை காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) அறிவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து எவ்வளவு கறுப்புப் பணம் கிடைத்தது?” என கேள்வி எழுப்பினார்.

அம்பானி மற்றும் அதானியை 5 ஆண்டுகளுக்கும் மேலாக விமர்சித்த ராகுல் காந்தி, ஒரே இரவில் அவர்களை விமர்சிக்காமல் இருக்க என்ன ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், அம்பானி, அதானி பற்றி பேசாதது ஏன் என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அம்பானி, அதானி டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிகிறது என்றால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவமா? நீங்கள் அப்படி வாங்கி தான் பழக்கமா?” என கேள்வி ஏழுப்பியுள்ளார்.

மேலும், “தேர்தல் செலவுக்காக அதானி மற்றும் அம்பானியிடம் சட்டவிரோதமாக காங்கிரஸ் பணம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் அவர்களிடம் விசாரணை நடத்த, கூடிய விரைவில் அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகளை பிரதமர் அனுப்ப வேண்டும். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் அதனை செய்ய வேண்டும்.

அம்பானி, அதானி ஆகியோர் கருப்பு பணம் வைத்துள்ளதாக உங்களுக்கு தெரிந்தும் அவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஏன் என்று பொதுமக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? அம்பானி - அதானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க நீங்கள் எவ்வளவு அவர்களிடம் வாங்கினீர்கள்?” எனவும் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Share this story