தமிழக அரசுக்கு, அண்ணாமலை சவால்..

தி.மு.க. தொடங்கிய இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய பிரசாரமே தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது என்றும், வடமாநில மக்களை ஏளனமாக பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதுமான கலாசாரத்தின் விளைவே இந்த நிலைக்கு காரணம் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வட இந்திய சகோதரர்களுக்கு எதிரான பிரசாரத்தை அம்பலப்படுத்தியதற்காக தி.மு.க. என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். எனவே, அவர்கள் பேசிய வீடியோ இதோ (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. முன்னணி தலைவர்கள் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பேசிய பழைய வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன).
என்னை கைது செய்ய பாசிச தி.மு.க.வுக்கு சவால் விடுக்கிறேன்.பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல் வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள். திறனற்ற தி.மு.க.வுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது போலீசார் திடீரென வழக்கு போட்டிருப்பதும், இதைத் தொடர்ந்து அவர் சவால் விடுக்கும் வகையில் அறிக்கை விட்டிருப்பதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.