அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் சிறைதான்: எடப்பாடி பழனிசாமி சூசக பேச்சு..

By 
jll

அதிமுகவுக்கு துரோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் சிறையில் தான் இருக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதிமுகவின் துணை பொதுசெயலாளர் K.P.முனுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, வாக்களித்த மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என தனி திட்டத்தை திமுக இதுவரை கொண்டுவரவில்லை. சட்டமன்றத்தில் முன்வரிசையில் உள்ள திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அவர்கள் எங்கு செல்ல வேண்டுமென அங்கு செல்ல இருக்கிறார்கள், தற்போது எல்லா அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். உப்பை சாப்பிட்டவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.

அதிமுகவிற்கு துரோகம் செய்து திமுகவில் அமைச்சரான செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அதிமுகவிற்கு துரோகம் செய்தவர் ஆண்டவனால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக என்கிற இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொள்வார்கள் என பேசி வருகிறார்கள். அதிமுகவை பொருத்தவரை பாஜக உடன் கூட்டணி  இல்லை இல்லை இல்லை.

ஆ.ராசா அரசியல் அநாதை ஆக போகிறார். நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழக்கிறார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்திய ராசா திருந்தாவிட்டால் அதிமுக தொண்டர்களால் திருத்தப்படுவீர்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து பலர் இன்னும் பேசுகிறார்கள். ஏற்கனவே நாங்கள் தீர்மானம் போட்டு பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று உறுதியாக சொல்கிறோம். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி உள்ளது. எந்த கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன என்று இன்னும் 10 நாட்களில் தெரியும். அதிமுக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம், நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

Share this story