கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு : குருபூஜையில் பங்கேற்பு...

Below is an interview with Chief Minister MK Stalin Participation in Gurupuja ...

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 

இந்நிலையில், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று பகல், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அகழ் வைப்பகம் :

பின்னர், மு.க.ஸ்டாலின் கார் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடக்கும் அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

கீழடியில் நடக்கும் 7-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அதன் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், கீழடியில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடங்களையும் பார்வையிட்ட அவர், அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அகழ் வைப்பகம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.

அதன்பின், அதே பகுதியில் அகழாய்வு நடக்கும் மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளுக்கும் சென்றார்.

ஆய்வை முடித்துக் கொண்ட பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து, மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். 

வழி நெடுகிலும் அவருக்கு திமுக சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், நகரில் நடக்கும் வளர்ச்சித் திட்ட பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.

கலைஞர் நூலகம் :

மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் ரூ. 100 கோடி செலவில் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகம் அமையும் இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து மதுரை நகரில் பல்வேறு இடங்களில் நடக்கும் மேம்பால பணிகளை ஆய்வு செய்கிறார். அதன்பின், இரவு அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

குருபூஜை :

நாளை காலை 7.30 மணிக்கு மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு மு.க.ஸ்டாலின் காரில் புறப்படுகிறார். 7.45 மணிக்கு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

அதனைத் தொடர்ந்து, 8 மணிக்கு தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.

9:15 மணிக்கு பசும்பொன் சென்றடையும் மு.க.ஸ்டாலின் அங்கு குருபூஜை விழாவில் பங்கேற்று, தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

அவருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி ஆகியோரும் மரியாதை செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்தபின், மதுரைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
*

Share this story