இரு(ள்) தரப்பு ஒப்பந்தம் : ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு தகவல்கள்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், தொலைநோக்கு சிந்தையோடு; தனது நீண்ட அரசியல் அனுபவத்தில்.. கட்சி நலன் கருதி, சூசககமாகவும், பகிரங்கமாகவும் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு :
'நேற்றைய அவருக்கும், இன்றைய இவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்...
நேற்றைய அவர்; இன்றைய இவரிடம் கேட்டுப் பெற்ற வரங்கள்...
முன் குறிப்பு:
ஆட்சியை நீங்கள் கைப்பற்றிக் கொள்ளுங்கள்.
'தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியை நான் கைப்பற்றிக் கொள்கிறேன்' என்னும் அடிப்படையில், கடந்த பல தேர்தல்களுக்கு உங்களுக்கு வியூக வகுப்பாளராக இருந்தவரையே எங்களுக்கானவராக நியமித்துக்கொண்டு அவரது அறிவுரைப்படியே, எனக்கு அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் பிரகாரம்...
உங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும் வகையில்... நான் எனது கூட்டணியை பலவீனமாக அமைத்துக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதன் விளைவாக, தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று அரசை நடத்தி வருகிறீர்கள். மேற்கொண்டு நம் இருவரது ஒப்பந்தப்படி, நீங்கள் தடுக்க நினைக்கும் தேசிய கட்சியை தமிழகத்தில் பெரிய அளவில் படர விடாமல் பார்த்துக் கொள்ளவும், கூடவே என்னையும் நான் அடித்து குவித்து வைத்திருக்கும் பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும்..
அச்சுறுத்தும் வழக்குகளில் அகப்படாமல் தப்பிக்கவும், கீழ்க்கண்ட வரங்களையும் உத்தரவாதத்தையும் தங்களிடம் உறுதி செய்து கொள்கிறேன். அவையாவது..
வரம் எண் 1.
அமைச்சராக இருந்த என்னை முதலமைச்சராக உயர்த்திய.. நான் தற்போது வசித்து வருகிற அந்த ராசியான அரசு பங்களாவையே எனக்கு ஒதுக்கித் தரவேண்டும்.
வரம் எண் 2.
மலைநாடு கொலை கொள்ளை விவகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக கிடப்பில் போட்டு, விசாரணை மாடங்களை மட்டும் மாற்றி, அதில் இருந்து என்னையும் எனது ஆட்களையும் கொங்கு மண்டல புள்ளிகளையும் காப்பாற்றி தர வேண்டும்.
வரம் எண் 3.
என் சார்புடைய முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் வெறும் கண் துடைப்பாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். ரெய்டு அளவிலேயே நடவடிக்கைகள் நிலைகுத்தி நின்றுவிட வேண்டும்.
பழி வாங்குவது போன்ற தோற்றம் இருக்க வேண்டுமே தவிர, கடுமை ஏதும் காட்டக் கூடாது. உதாரணமாக, டன் நிலக்கரி காணாமல் போனதாக சொல்ல வேண்டுமே தவிர, மேல் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது.
வரம் எண் 4.
அதுபோலவே, ஸ்மார்ட் பட்டி திட்டத்தில் பல்லாயிரம் கோடி ஊழல் என பழி சுமத்தலாமே தவிர, அதற்கான நடவடிக்கைகள் நாடகங்களாக மட்டுமே இருக்க வேண்டும். அதே வேளையில், நம் இருவருக்கும் இடையில் பலமான பகையும் போட்டியும் இருப்பதாக மக்கள் நம்புகிற வகையில், நாம் இருவரும் காரசாரமாக மோதிக் கொள்ளவேண்டும். எவ்வகையிலும் மக்களுக்கு சந்தேகம் வந்து விடக் கூடாது.
வேண்டுமானால், மக்களிடம் சந்தேகம் வராமல் இருக்க, ஒரு சில வழக்குகளைக்கூட, என் மீதோ எனது சகாக்கள் மீதோ தொடுக்கலாம் ஆனால், அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்காத அளவில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, நம் இருவருக்கும் இடையிலான இந்த அந்தரங்க ஒப்பந்தங்களை மத்திய ஆட்கள் மோப்பம் பிடித்து விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வரம் எண் 5.
அவர்களை, தமிழகத்தில் வளர விடாமல் பார்த்துக்கொள்ளவும்.. வேண்டுமானால், தருணம் பார்த்து அவர்களை கூட்டணியில் இருந்தே கழற்றிவிடும் முடிவை நான் எடுக்க வேண்டுமானால், என் மீதான எந்த வழக்கும் மத்திய ஆட்களின் வரையறை எல்லைக்குள்..அதாவது அவர்களின் அதிகார வரம்புக்குள் இருக்கக்கூடாது.
எனவே, என் மீதும் எனது சம்பந்நி மீதுமான பல்லாயிரம் கோடி டெண்டர் முறை கேடு வழக்கை, மாநில லஞ்ச ஒழிப்புத் துறையே விசாரிக்கும் என்ற கோரிக்கையை நீங்கள் உச்சநீதிமன்றத்தில் முன் வைத்து, அந்த வழக்கை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடவேண்டும்.
இதற்காக, உங்கள் அரசு முன்வைக்கும் கோரிக்கையை கச்சிதமாக முடித்துத் தருகிற காரியத்தை தொடர்ந்து எங்களை காப்பாற்றி வருபவரான அந்த "சிவன்" பார்த்துக் கொள்வார்.
அதே வேளையில், என்னை சாய்த்து விட்டு, என்னைப் போலவே துரோகத்தை முன்வைத்து என் இடத்திற்கு வருவதற்கு ஆசைப்படுபவர்கள் யார் என்பதை நான் சுட்டிக்காட்டும் நேரத்தில்...
அந்த நபர்கள் மீது மட்டும் தேவைப்படும்போது வழக்குகளை துரிதப்படுத்தி, அவர்களை ஒடுக்க எனக்கு ''தாங்கள்'' உதவிட வேண்டும் அதாவது, எனது துரோகங்களுக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். அதே சமயம், எனக்கு யாரும் துரோகம் செய்யாமலும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்படி, நம் இடையிலான ஐந்து அம்ச ஒப்பந்தங்களை எனது மகனும் தங்களது மருமகனும் முன்நின்று நடைமுறைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும்.
பின் குறிப்பு :
என் ஆட்சிக்காலத்து அறுவடையை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தாங்கள் கோருகிற சதவீதத்தை மறுக்காமல் தரவும்.. இதில் குறிப்பிடப்படாத அம்சமாக ஏற்றுக் கொள்கிறேன்.
மேலும்... இப்படியாக, கொலை கொள்ளை லஞ்சம் ஊழல் உள்ளிட்ட அனைத்து வில்லங்கங்களிலிருந்தும் என்னை காப்பாற்றி, எனது கடைசிக் காலத்தை சிறைக்கூடங்களில் கழிப்பதற்கான தேவை எழாமல் பார்த்துக்கொண்டால், தொடந்து என் கட்சியை ஒன்றுபட விடாமல் பிளவு நிலையிலேயே வைத்திருக்க நான் உளமார உறுதி தருகிறேன்.
இதன் மூலம் 2024 மற்றும் 2026 ஆகிய காலங்களில், இலை துளிர்த்து விடாமலும்... சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கவும்...
2019 போலவே, பூ எவ்விடத்திலும் மலராதவாறு பார்த்துக் கொள்ளவும்... என்னை வாழவைத்த குத்துக்கோல் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள..
கூவத்தூர் தவழ்ந்தசாமி.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.