மகள்களை காக்க முடியாத பாஜக : ராகுல் கருத்து

By 
mpr3

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை தட்டியும், அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அது மறுக்கப்படுவதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது கருத்துக்களை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம், அன்னை இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன.

இந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; மாநில பா.ஜ.க. அரசாங்கமும் குற்றவாளிதான். நாட்டின் மகள்களை பாதுகாக்க இயலாத அரசாங்கம் நடைபெறுகிறது. மாநிலத்தில் நீதி இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை, உரிமைகள் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் மகள்களின் நிலை குறித்து முழு நாடும் வெட்கப்படுகிறது.

ஆனால், மாநில தலைவருக்கும் நாட்டின் பிரதமருக்கும் இவை அவமானமாகவே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் உரைகள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் தவறான கோஷங்களுக்கிடையே நாட்டின் மகள்களின் அலறல்களை பா.ஜ.க.வினர் அடக்கிவிடுவார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். 

Share this story