சபாநாயகராக பாஜக எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு
 

By 
BJP MLA elected unopposed as Speaker

தேர்தலுக்கான அறிவிப்பை சட்டமன்ற செயலர் முனிசாமி கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். நேற்று மணவெளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவரின் மனுவை முதலமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயம், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் முன் மொழிந்தும், வழி மொழிந்தும் 8 மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. சபாநாயகர் தேர்தலுக்கு வேறு எம்.எல்.ஏ.க்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அறிவிப்பு வெளியிடுகிறார் :

நாளை புதன்கிழமை சட்டசபை கூடுகிறது. அப்போது, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், புதிய சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.

தொடர்ந்து சபாநாயகரை பதவியேற்க அழைப்பார். அவை முன்னவர் ரங்கசாமியும், எதிர்க்கட்சித்தலைவர் சிவாவும் சபாநாயகரை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைக்கின்றனர்.

பின்னர், புதிய சபாநாயகரை எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்திப் பேசுகின்றனர்.

கடந்த 2001-ம் ஆண்டு புதுவை சட்டமன்றத்துக்கு பா.ஜனதா சார்பில் ரெட்டியார்பாளையம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 20 ஆண்டுகளாக இல்லை.

முதல் முறை :

கடந்த சட்டமன்றத்தில், பா.ஜ.க.வை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வில் 6 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற ஏம்பலம் செல்வம் சபாநாயகராகியுள்ளார்.

பா.ஜ.க.வில் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதுவை சட்டமன்ற வரலாற்றில், முதல் முறையாக பா.ஜ.க.வை சேர்ந்தவர் சபாநாயகராக பதவியேற்கிறார்

Share this story