ஓ.பன்னீர்செல்வத்துடன், பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து சந்திப்பு..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் கடந்த மாதம் 24-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை தவிர்த்த ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிலேயே தங்கி உள்ளார்.
துக்க நிகழ்ச்சிகளில் தி.மு.க. உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லக்கூட இல்லை என்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகள் ஆதரவான நிலையில் இருந்தனர். ஆனால் பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. துக்க நிகழ்ச்சியில்கூட பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மாநில நிர்வாகிகளான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் தினந்தோறும் அவரது வீட்டிற்கு வந்து செல்கின்றனர். உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கையில்,
'தாயார் மறைவால் துக்கத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் 30 நாட்கள் கழித்தே கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இருந்தபோதும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறார். அதில் வரும் தீர்ப்புகள் மற்றும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். 30 நாட்கள் கழித்து அவரது அதிரடி அரசியல் தொடரும். அதன் பின்பு அ.தி.மு.க.வை தொண்டர்கள் பலத்துடன் மீட்டு கொண்டு வருவார் என்றனர்.
ஆனால் இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், ஓ.பி.எஸ். பா.ஜ.க.வின் முழுநேர விசுவாசியாக மாறிவிட்டார். அ.தி.மு.க.வில் அவருக்கு இடம் இல்லை என்பதை மீண்டும் நிர்வாகிகள் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் தொண்டர்களை நம்பாமல் கோர்ட்டு, வழக்கு, பா.ஜ.க. ஆகியவற்றை நம்பியே ஓ.பி.எஸ். உள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து தோல்வி ஏற்பட்டு வருகிறது. கட்சியில் எடப்பாடி பழனிசாமி முழுமையாக ஈடுபட்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். ஆனால் ஈரோடு தேர்தலில் கூட ஓ.பி.எஸ். தனது பங்கை ஆற்றாமல் ஒதுங்கி விட்டார்.
3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டால் நாங்கள் ஒதுங்கிக்கொள்வோம் என்று கூறியதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இன்னும் பா.ஜ.க. தயவையே நம்பி இருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையையே விரும்புகின்றனர் என்றனர்.