வரமும் சாபமும் : ஓபிஎஸ் தரப்பு விமர்சனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
'இரட்டை இலை சின்னத்தின் தோல்வியை ஒருபோதும் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள மாட்டோம். இது தடுக்க முடியாது போன தலைக்குனிவு என்றே வருந்துகிறோம்.
மக்கள் செல்வாக்கோ நட்சத்திர அந்தஸ்தோ, பிறரை வசீகரிக்கும் அறிவு ஆற்றலோ குறைந்த பட்சம் அனைவரையும் அரவணைத்து செல்லும் தாயுமானவ தலைமைப் பண்போ கடுகளவும் இல்லாத எடப்பாடி என்கிற தனிமனிதனின் அதிகார வெறியும் அபகரிப்பு முயற்சியும்தான்..
முக்கடல் சூழ்ந்த பாரததத்தின் மூன்றாம் பெரும் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இப்படி ஒரு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதே சத்தியமான உண்மை.
ஒன்றுபட்டால் தான் வென்று காட்ட முடியும் என்பதை, ஆயிரம் முறை ஓ.பி.எஸ் வலியுறுத்தியபோதும் அதனை, செவி கொடுத்து கேட்காமல் இயக்கத்தின் நலத்தை விட, தன்நலமே முக்கியம் என எடப்பாடி காட்டிய மூர்க்கத்தனம் தான் இப்படிப்பட்ட நிலைக்கு காரணம்..
இதனை தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், எடப்பாடியின் ஆட்சியை வைத்து அறுவடை செய்தவர்களும் பெருத்த மகசூல் பார்த்த முன்னாள் மாண்புமிகுக்களும்..
கடிவாளம் இல்லாத குறுநில மன்னர்களாக திரியும் மாவட்டச் செயலாளர்களுமே, இந்த பரிதாப சூழலுக்கு பங்காளிகள் என்பதை உணர வேண்டும்.
அடித்து வைத்துள்ள பணத்தைக்கொண்டு, பொதுக்குழு ஆடுகளை கொள்முதல் செய்ய முடியுமே தவிர பொதுமக்களை வாங்க முடியாது என்பதை புரிந்துகொண்டு, தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் இன்றைய படுதோல்வி நாளைய தொடர்தோல்விகளாகிவிடும் என்பது நிச்சயம்.
எனவே யாருக்கு வெற்றி தோல்வி என்பதை புறந்தள்ளி விட்டு, எதிர்கால வெற்றிக்கு ஒரே வாய்ப்பு; ஒற்றுமை மட்டுமே உணர்ந்து திருந்துவது அவசியம் அவசரம்.
* 2021-ல் சட்டமன்ற பொதுத் தேர்தலில், 69.5 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் மட்டுமே களத்தில் நின்று.. அவர்பெற்ற வாக்குகள் 58,000 என்றால்..
அதே ஈரோட்டு கிழக்கு 2023 இடைத் தேர்தலில், 74.5 சதவீத வாக்குகள் பதிவான நிலையில்.. எடப்பாடி கட்சி வேட்பாளர் தென்னரசு 116 தேர்தல் பொறுப்பாளர்கள் சூழ களமிறங்கி, அவர் பெற்றிருக்கும் வாக்குகள் வெறும் 43,819 மட்டுமே என்றால்...
மீசையை மழித்துக் கொள்ள வேண்டியது இடி அமீன் எடப்பாடியும், திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றதை போலவே, எடப்பாடியும் ஜெயிப்பார் என கூச்சமின்றி கூவிய எடப்பாடியின்
கூலிகளும் தானே.
* எங்கள் அம்மா மனித சக்தி கடந்த மகாசக்தி; எடப்பாடி பழனிச்சாமி கதைக்குதவா அட்டக்கத்தி.
அதனால, பென்னாகரம் தேர்தலை முன்வைத்து எட்டுத் தேர்தல் எடப்பாடிக்கு முட்டுக் கொடுப்பது குதிரையுடன் கழுதையை ஒப்பிட்டு பேசுகிற கோமாளி காரியமே.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.