வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்..

By 
pudjet9

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வளர்ச்சி என்பதை மந்திரமாக கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய 4 தரப்பினருக்கு முக்கியத்துவம் அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாற்றத்தை ஏற்படுத்தும் தலைமையையும், இந்தியாவின் முன்னேற்றத்தில் அதன் தாக்கத்தையும் குறிப்பிட்டதுடன், 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அமிர்த காலம் கடமைக்காலமாக இருக்க வேண்டும் எனவும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். “ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள முழுமையான பட்ஜெட்டில், 'வளர்ச்சியடைந்த பாரதம்' நோக்கத்திற்கான விரிவான செயல் திட்டத்தை எங்கள் அரசு சமர்ப்பிக்கும்.” எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட், வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான பட்ஜெட் எனவும், 2047இல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை வலுப்படுத்த இந்த பட்ஜெட் உத்தரவாதம் அளிப்பதாகவும் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இளம் வயதினரின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இளைஞர்கள் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், மூலதனச் செலவினங்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.11 லட்சம் கோடியாக வழங்கப்பட்டுள்ளது. இது 21ஆம் நூற்றாண்டின் நவீன உள்கட்டமைப்புகளை இந்தியாவிலும் உருவாக்க உதவும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறோம்; அதனை அடைகிறோம். பின்னர், மீண்டும் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கிறோம். ஏழைகளுக்காக, நாங்கள் நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளை கிராமங்களிலும் நகரங்களிலும் கட்டியுள்ளோம். இப்போது 2 கோடி புதிய வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 கோடி பெண்கள் லட்சாதிபதியாக உள்ளனர். அதனை 3 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.” என தெரிவித்தார்.

Share this story