'சமைக்கலாம், சாப்பிடக் கூடாது' : தீர்ப்பும் ஓபிஎஸ் தரப்பு கருத்தும்..

marudhu126

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. 

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித் தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் மனுதாரர்களின் வக்கீல்கள் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார்.

அதன்படி இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் பரபரப்பான வாதங்களை முன் வைத்தனர். மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடினார். அவரது வாதம் வருமாறு:-

வேட்புமனுதாக்கல் நிறைவு என இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வு என அறிவிக்கப்படலாம். ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என கூறி விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடைய முடியாது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்புகிறது. தலைமை கழக நிர்வாகியாக அல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாதபடி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என வாதாடினார்.

அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியலிங்கம் வாதாடியதாவது:-

1.65 கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் 1.65 கோடி தொண்டர்களின் ஆதரவை பெறவில்லை. அவர்களது ஆதரவும் இவர்களுக்கு இல்லை. கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது. அதில் அநீதி இருந்தால் மட்டுமே தலையிட முடியும்'  என வாதாடினார்.

இதையடுத்து, நீதிபதி குமரேஷ்பாபு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. அதற்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22-ந்தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும். 2 வழக்குகளிலும் 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்.

எனவே 24-ந்தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார். 

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ள கருத்து வருமாறு :

'சமைக்கலாம், சாப்பிடக் கூடாது.

பாயை விரிக்கலாம், படுக்கப்புடாது..

கல்யாணம் நடத்தலாம், முதலிரவு கூடாது..

தீர்ப்பு ஒத்தி வச்சாச்சு..

அப்புறம் என்ன..

அதே தான்..' என குறிப்பிட்டுள்ளார்.


 

Share this story