கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.. 

By 
heli2

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்துவருகிறது. ஒருசில இடங்களில் 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது அதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 

தாமிரபரணி ஆற்றிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் தனது கடித்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அங்கு அணி திரட்டியுள்ளோம் என்றும், பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட நிவராணப் பொருட்கள் இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் மக்களுக்கு விநியோகிக்க முடியவில்லை எனவே அவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே விநியோகிக்க இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விழியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் 2 மற்றும் கடலோரக் காவல் படையின் 2  ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெருமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதால் அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story