சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு; ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது..

By 
singa1

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருவதற்காக வருகிற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார்.

இதற்காக சென்னையில் இருந்து நேற்று காலையில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள், பல்வேறு தமிழ் அமைப்பினர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மலர் கொத்து, புத்தகங்கள், பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர்.

சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களையும், முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளையும் சென்று சந்தித்தார். சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிம்யின் வாங்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவரிடமும் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடுகள் செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இதன் பிறகு சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ்தாஸ் குப்தாவை சந்தித்து பேசினார். அப்போது அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். தமிழகத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து இன்று மாலையில் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), பேம் டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பல்கலைக் கழகம் (டிசைன் மற்றும் டெக்னாலஜி), சிங்கப்பூர் இந்தியா கூட்டமைப்பு, சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இன்று இரவு சிங்கப்பூரில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஜப்பான் புறப்பட்டுச் செல்ல உள்ளார். அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஜப்பான் நாட்டு முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பும் விடுக்க உள்ளார். 

Share this story