சென்னையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்! திமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி ரோட்டில் கொலை..

By 
araa

சென்னை அருகே திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருபவர் ஆராவமுதன்(56). இவர் வண்டலூர் மேம்பாலம் அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதை பார்வையிடுவதற்காக தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரவுடி கும்பல் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், நிலைகுலைந்து போன ஆராவமுதனை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியது. இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் கார் ஓட்டுநர் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆராவமுதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

Share this story