கோவையா, சேலமா, ஈரோடா, திருப்பூரா? : மருது அழகுராஜ் உரைவீச்சு 

By 
manadu

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தங்கமணி, வேலுமணி,  சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி என குறுகிய நோக்கம் கொண்டவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு அப்பால் இருக்கும் ஒட்டுமொத்த டெல்டா மற்றும் தென்பகுதிகளைச் சார்ந்த தொண்டர்களை
இரண்டாம் தரமாக நடத்த அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்றால் ..

அந்த அவர்களது மாற்றாந்தாய் அரசியலுக்கு உதயகுமார் செல்லூர் ராஜூ ராஜன்செல்லப்பா காமராஜ் விஜயபாஸ்கர் போன்ற வலுக்கும் இடம் தேடி பிழைப்பதையே வாழ்வாக கொண்டவர்களை..  அவர்கள் துரோகத் துணைகளாக வைத்துக் கொண்டு, ஒரு பிரிவினை அரசியலை எடப்பாடித் தரப்பு முன்னெடுத்து வருகிறது.

அண்ணா தி.மு.க.வின் தோற்றுவாய் தொடங்கி அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களிப்பதையே பிறவிக் கடமையாக கொண்டிருக்கும் முத்தரையர், முக்குலத்தோர், யாதவர், நாடார், தேவேந்திர குல வேளாளர் ஆதிதிராவிட மக்கள் உள்ளிட்டோரை கொண்ட தென்பகுதி அரசியலை புறக்கணிக்கும் போக்கை அவர்கள் கையாண்டு வருகிறார்கள்.

ஒருவேளை, ஆந்திரமாநிலம்.. ஆந்திரம் தெலுங்கானா என பிரிந்ததுபோல.. தமிழகம் வட மற்றும் வடமேற்கு மாவட்டங்களை உள்ளிட்ட ஒரு மாநிலத்தை உருவாக்கித் தருவதாக உத்தரவாதம் ஏதேனும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதோ என்னவோ..

ஆனால், அம்மா அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ்ஸோ.. ஒட்டுமொத்த சமூகங்களையும் ஓர் குடைக்குள் நிறுத்துகிற ஒன்றுபட்ட அண்ணா தி.மு.க. வின் பாரம்பரியத்துக்கும் சமூகநீதிக்கு குந்தகம் வந்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஒர் வழி நின்று நேர்வழி சென்றால், நாளை நமதே என்னும் மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மட்டுமே மனதில் கொண்டு ஒன்றரைக் கோடி தொண்டர்களின் ஒற்றுமைக்கும்.. அவர்களுக்கு கழக நிறுவனர் எம்ஜிஆர் தந்த உரிமைக்கும்  பாடுபடுகிறார்.

இந்த சுயநலமற்ற நோக்கத்திற்கு தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் நாளுக்கு நாள் பேராதரவு பெருகுவதற்கு முதல் சாட்சி பொன்னி நதிக்கரையில் நடந்த புரட்சிகர மாநாட்டில் குவிந்த லட்சோப லட்ச தொண்டர்களின் கூட்டம்..

இதன் நீட்சியாக அடுத்து அமையப்போவது, கழகம் நடத்தப் போகுகிற கொங்கு சீமைக் கூட்டமாக அமையும் என்பது சத்தியம்.

பொங்கு கழகத்திற்கு இன்னல் விளைந்தால் சம்ஹாரம் நிஜமென்று சங்கே முழங்கு என கொங்கு சீமை மக்கள் அண்ணன் ஓ.பி.எஸ் தலைமையில் திரளப் போகும்  அந்நாள் தான் அண்ணா தி.மு.க.வின் அரசியல் வரலாற்றில் ஒரு பொன்னாளாகும் என்பது நிச்சயம்.

மக்கள் திலகத்தின் காலம் தொடங்கி, மகராசி அம்மாவின் காலம் தொடர்ந்து பாசப் பேரியியக்கமாம் அண்ணா திமுக வையும், அதன் வெற்றிச்சின்னமான பச்சிலையாம் இரட்டை இலையையும் பெரிதும் நேசிக்கும் கண்ணியமிக்க கவுண்டர் சமூகமும்..

உழைப்பாளிச் சமூகங்களான வன்னியர் அருந்ததியர் மக்களும்.. நற்றமிழ் பூமியின் உற்றநல் உறவுகளான நாயுடு சமூக மக்களும்.. செய்யும் தொழிலில் நெய்யும் தொழிலே உயரியது எனும் மானம் காக்கும் ஆடைகள் நெய்யும் நெசவாளர் மக்களும்.. செம்மாந்த புகழுடைய செங்குந்த முதலியார்களும் .. ஐ வேளை தொழுவதோடு அன்னைத் தமிழ் மண்ணை நேசிப்பதை ஆறாம் கடமையாக கொண்டு வாழும் இஸ்லாமிய மக்களும்.. அன்பு ஒன்றையே சுவாசமாக கொண்டிருக்கும் கிறிஸ்வதவ மக்களும்..

மூக்கறுப்பு போர் நடந்த காலத்தே கொங்குசீமையை காக்க பாதுகாவலர்களாக சென்று, அங்கேயே இராமநாதபுரம் அமைத்து வாழுகிற தேவரின மக்களும்..  பாசமே வடிவான படுகர் சமூகமும்,

ஈரிலை பற்றாளர்களான இருபத்து நான்கு மனைச்செட்டியார்களும், மக்கள் திலகத்தின் காலம் தொட்டு கழகத்தை உயிராக நேசிக்கும் மலையாளிகளும்.. 

கரம் கோர்த்து வாழுகிற ஒட்டுமொத்த அனைத்து தமிழ் மணி சுமக்கும் அருமைக்குரிய பெருங்குடி மக்களின் பேராதரவோடு நடக்கக் காத்திருக்கும் மாபெரும் மாநாடு  ஓ.பி.எஸ்  கண்ணிய அரசியலுக்கு கண்முன் காட்சியாக, கல்வெட்டு சாட்சியாகும் என்பது சத்தியம்..

கொடி பிடிக்கும் தொண்டனின் உரிமை காக்கும் அந்த மாநாடு.. கோவை கொடிசியாவிலா.. இல்லை, கொடிகாத்த குமரனது திருப்பூர் கொள்கைத் திடலிலா..அல்லது மாங்கனி மாநகர் சேலத்திலா..

இல்லை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதித்த ஈரோட்டு சீமையிலா..என ஆர்வத்தோடு அறிவிப்பை நோக்கி காத்திருக்கிறார்கள் அன்புடன் கழகத் தொண்ர்கள்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story