இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு.! - முதற்கோப்பில் கையெழுத்திடுவாரா புதிய பிரதமர்?

By 
erasai2

'இந்திய மக்களுக்கு மதுவில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது?' என சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கவிஞர் அ.திருமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும், இங்கு வாழும் மக்களுக்கு மதுவில் இருந்து மட்டும் இதுவரை விடுதலை கிடைக்கவில்லை. இது, இந்த தேசத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் அலட்சியம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற தேர்தல் வரும்போதோ அல்லது சட்ட மன்றத் தேர்தல் வரும்போதோ எல்லாக் கட்சிகளின் வாக்குறுதிகள் பட்டியலில் பூரண மதுவிலக்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ஆனால், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் , முதலில் அவர்கள் கைவிடும் கொள்கை, பூரண மது விலக்காகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பிறகு, மதுக் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் மதுக்கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போவதால், பூரண மதுவிலக்கை எல்லோரும் விரைவில் மறந்து விடுகிறார்கள்; ஏனெனில் பண மழை கொட்டுவது அங்கிருந்துதான்; அதை வைத்துத்தான் ஆட்சியை  நடத்த முடிகிறது. 

ஆட்சியில் இருப்பவர்கள், மதுக்கடைகளை வைத்துத்தான், தங்களையும் தங்கள் கட்சியையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் பூரண மதுவிலக்கை இந்தியாவில் உடனடியாக கொண்டு வர, புதிய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும்  தற்போது வலுத்து வருகிறது; 

சில , அரசியல் எதிர்க்கட்சிகள் மதுவிலக்கைப் பற்றி பேசினாலே, அதிகார பலம், பண பலத்தை வைத்து ஆட்சியாளர்கள் , அவர்களை அடக்கி விடுகிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. இதுவரை யாராலும் அவர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியவில்லை. 

மதுவிலக்கு கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு, தேசியக் கொடியை மட்டும் தங்கள் காரில் பறக்க விடுவதில் குறியாக இருக்கும், பேராசை பிடித்த தலைவர்கள் இருக்கும் வரை, மாநிலங்களில் பூரண மதுவிலக்கு என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கும்; இதை மக்கள் இப்போது நன்றாக உணர்ந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே?

ஒன்றிய அரசு நினைத்தால், ஒரே ஒரு அவசரச் சட்டத்தின் மூலம், இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதற்குத் தேவை, வரப் போகும் புதிய ஒன்றிய அமைச்சரவையின் முடிவும் புதிய பிரதமரின் ஒரே ஒரு கையெழுத்து மட்டுமே. பூரண மது விலக்கிற்கான முதற்கோப்பில் முதல்  கையெழுத்திடும் துணிச்சல், வரப் போகும் புதிய பிரதமருக்கு வருமா? என்பதுதான் இன்றைய கேள்வி; இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, இந்திய மக்களின் ஏகோபித்த கேள்வி ஆகும். 

இறைவன் மீது நம்பிக்கை வைத்து, இந்த தேசத்தில் இருந்து மதுவை விரட்டி அடிக்கும் புதிய ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பை எதிர்பார்த்து நாமும் மக்களோடு மக்களாக  காத்திருப்போம். அதுவரை, வரப் போகும் புதிய பிரதமரை வாழ்த்தி வணங்கி வரவேற்பது நமது கடமை என்று நினைப்போம்! வாழ்க பிரதமர்! வெல்க பாரதம்!! ஜெய்ஹிந்த்! ' இவ்வாறு சமூக ஆர்வலர் கவிஞர் அ.திருமலை தெரிவித்துள்ளார்.
 

Share this story