அழிவுப்பாதையில் உள்ளது காங்கிரஸ் : ஸ்மிருதி ரானி பேச்சு

By 
rani6

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் இங்கிலாந்தில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல் நடப்பதாகவும் கூறினார்.

அவர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

இந்தநிலையில் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஸ்மிரிதி இரானி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இங்கிலாந்தில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகள், இந்திய ஜனநாயக அமைப்புகளையும், பாராளுமன்றத்தையும் அவமதிக்கும் செயல். ராகுல்காந்தி குடும்பத்தின் உத்தரவின்பேரில், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தார்களே? இதுவா ஜனநாயகம்?

ராகுல்காந்தி குடும்பத்தின் உத்தரவின்பேரில், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் புத்தகங்களை கிழித்து, மேஜை மீது ஏறி சபைத்தலைவரான துணை ஜனாதிபதியை இழிவுபடுத்தினார்களே? இதுவா ஜனநாயகம்? ஒவ்வொரு குடிமகனும் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான்.

ஏனென்றால் பாராளுமன்றம் என்பது எம்.பி.க்கள் இணைந்த அமைப்பு மட்டுமல்ல. அது இந்திய மக்களின் குரல். எனவே, பாராளுமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு வராமல் புறக்கணித்துள்ளார். பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறியுள்ளது.

அவர் சொல்வதுபோல், இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இல்லை. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான அவரது செயல்பாடுகளால், காங்கிரசைத்தான் இந்திய மக்கள் அரசியல் அழிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story