காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைகிறார்? 

By 
tharani

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கட்சித் தலைமை மீது அதிருப்தியின் காரணமாக பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக எம்எல்ஏவாக விஜயதாரணி இருந்து வருகிறார். ஆனால், விஜயதாரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 

ஆகையால், எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது போட்டியிட வேண்டும் என முயற்சித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக விஜயதாரணி  தீவிர அரசியிலில் ஒதுங்கி இருந்து வருகிறார். 

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்த முறை தனக்குச் சீட்டு வழங்க வேண்டும் என்று கட்டன் ரைட்டாக கூறியுள்ளார். ஆனால், திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா? அப்படியே வழங்கினாலும் விஜயதாரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான். 

விஜயதாரணிக்கு எந்த வகையில் எம்.பி. சீட் கிடைக்க கூடாது என்ற வேலைகளில் கே.எஸ்.அழகிரி ஒருபுறம் ஈடுபட்டுள்ளார். ஆகையால் விரைவில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி முன்னிலையில் விஜயதாரணி பாஜக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story