அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் : கல்வித்துறை அறிவிப்பு

Counseling for teachers and students in all schools Academic Notice

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு கூறியதாவது :

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு, இன்று முதல் விருப்ப மனு அளிக்கப்படுகிறது. 

வருகிற 30-ந்தேதி வரை மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழையின் காரணமாக, வேளாண் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 

தமிழக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமைத்த குழு, அதன் சேத அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மேலும், மத்திய குழுவினரும் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அளவுக்கு முதல்வர் நிச்சயமாக நிவாரணம் வழங்குவார். 

கட்டமைப்புக்கு உத்தரவு :

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 85 ஆயிரம் மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து உள்ளார்கள்.

வழக்கமாக, அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 66 லட்சமாக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் அது 77 லட்சமாக உயர்ந்துள்ளது. பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், பாலியல் தொந்தரவுகளில் இருந்து மாணவ-மாணவிகளை காப்பாற்றுவது தொடர்பாக, நேற்றைய தினம் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உள்ளேன்.

பள்ளிக்கூடங்களின் புகார் பலகைகளில் அவசர தொலைபேசி எண்கள் மற்றும் அந்தப் பகுதி காவல் நிலையங்களில் போன் நம்பர்களையும் சேர்த்து எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கவுன்சிலிங் :

தற்போதைய நிலையில், உளவியல் ரீதியான கவுன்சிலிங் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் தேவைப்படுகிறது.

ஏற்கனவே, கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் திறப்பது பெரும் சிரமமாக இருந்தது. திறந்த பின்னர், மழையின் காரணமாக பள்ளிக்கூடங்களை இடைவிடாமல் கொண்டு செல்ல இயலவில்லை. 

பள்ளிக்கூடங்கள் அனைத்தும் தினமும் இயங்க தொடங்கும் சூழலில், மேற்கண்ட உளவியல் கவுன்சிலிங் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

அதுமட்டுமல்லாமல், பாலியல் ரீதியிலான புகார் எண் சரியாக செயல்படுகிறதா? என்பதையும் இன்றைய தினம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்' என்றார்.
*

Share this story