அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க, ஐகோர்ட் மறுப்பு

highcourt2

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன.

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று முதலில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 23-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடருவதற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், உரிமையியல் வழக்கை தொடரலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தனர். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மாங்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு உள்ளன. பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு, அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இது கட்சி நிறுவனரின் கொள்கைக்கு விரோதமானது. எனவே பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும். விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்காமல் நீக்கியதும் சட்டவிரோதமாகும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை.

பொதுக்குழுவில் நீக்கம் தொடர்பான எந்த அஜெண்டாவும் இல்லை. பொதுக்குழுவில் இருந்து நீக்கிய தீர்மானம் தன்னிச்சையான நடவடிக்கையாகும். பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு நிலுவையில்தான் உள்ளது. உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 23ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, நீக்கத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் பொதுக்குழு கூட்டுவதை எதிர்த்த வழக்கு செல்லாதது என எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அதனால் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படி, கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டால், உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 2021 டிசம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அந்த பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர தீர்மானம் கொண்டு வந்தது சட்டவிரோதமானது.

கட்சி அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமை விரும்புவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் அறிவிக்க உள்ளனர். இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால், எதிர்மனுதாரர்களின் வாதங்களை கேட்காமலேயே தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நீதிபதி, எதிர் மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தற்போதைய நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணை மார்ச் 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்கு 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே உள்ளது என்று கூறி எடப்பாடி பழனிசாமி அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக வர்ணித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் ஒட்டினார்கள். இப்படி அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக வருகிற 17-ந்தேதி ஐகோர்ட்டு எந்த மாதிரியான உத்தரவை வழங்க போகிறது என்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story