விமர்சனங்களை முன்வைப்பது எனக்கு மனவேதனை அளிக்கின்றது: தொண்டர்களுக்கு வைகோ கட்டளை..

By 
vaiko8

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது, முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கியது. இதனையடுத்து நடைபெற்ற 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் மதிமுகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை.

மதிமுக 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டது. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட மாட்டோம் என தெரிவித்தது. ஆனால் திமுக தரப்போ ஒரே ஒரு தொகுதி மட்டும் கொடுக்கப்படும் எனவும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உறுதியாக தெரிவித்து விட்டது. 

இதன் காரணமாக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாத நிலை உருவானது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேற வேண்டும் என அக்கட்சியினர் சமூகவலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மதிமுக பொதுச்செயலளார் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டணித் தலைமையுடன் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றது. இந்நிலையில், கழகத் தோழர்கள் சமூக வலைதளங்களில் தேர்தல் கூட்டணி குறித்து பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனை அளிக்கின்றது. 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய இலட்சியப் பாதையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்க இலட்சிய வெற்றிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்கவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தும் தன்னலம் கருதாது பாடுபட்டு வரும் பேரியக்கம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துவதாக வைகோ தெரிவித்துள்ளார். 

Share this story