முடிவெடுங்க முதல்வரே : ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தல் 

By 
tasmac4

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாரதி போற்றிப் பாடிய தமிழ்நாடு, இன்று கள்ளச்சாராயத்தில் சிறந்த தமிழ்நாடு என்னும் அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறது.

கள்ளுண்ணாமை எழுதிய வள்ளுவன் காலம் தொட்டு, மது மக்களை விழுங்கும் பூதமாக தொன்று தொட்டு தொடர்ந்தாலும்..

பூரணமதுவிலக்கு பூகோளமாக இருந்த புறநூனூற்று தமிழ் மண்ணில் சாராயக் கடைகளுக்கு புகுவிழா கண்டது கலைஞரது ஆட்சிக் காலம் என்றாலும்,

அதனை அரசு மதுக்கடைகள் வரை விஸ்தரித்ததில் எம்.ஜி.ஆர்., அம்மா என சகலருக்கும் அந்த பாவச்சரித்திரத்தில் பங்கு உண்டு என்பதை மறைக்க முடியாதுதான்.

எனவே, மதுவுக்கு ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காமல், தமிழ்நாட்டு முதலமைச்சர் மதுவே இல்லாத மாநிலம் தமிழகம் என்னும் புரட்சிகர முடிவை வினாடியும் தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டும்.

கொரோனா காலத்து முழுக் கதவடைப்பில், மதுவை மறந்து குடிமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து  மீளவும் வாழவும் தொடங்கியபோது.. லாக்டவுன் முடியும் முன்னே மதுக்கடைகளை திறந்துவிட்டு மறந்திருந்த "குடி மக்களை" டாஸ்மாக்குக்கு விரைந்து வாருங்கள் என அழைத்த பாவப் பெருந்தகைதான் எடப்பாடி என்பதையும் மக்கள் அறிவார்கள்.

எனவே, மதுவை கொண்டு அரசியல் செய்யும் அசிங்கத்தை எதிர்கட்சித்தலைவர் தவிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில், குடியில் மடிந்த கடைசிச் சாவுகளாக மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்கள் இருக்க வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவை தமிழக முதலமைச்சர் எடுக்க வேண்டும்.

உடலாலும் மனதாலும் மதுவுக்கு அடிமையாகி இருக்கும் குடிநோயாளிகளை மீட்டெடுக்க, குடிப்பழக்க மீட்பு சிகிச்சை மையங்களை தமிழக அரசு மாநிலமெங்கும் திறக்க வேண்டும்.

போதை இல்லாத புதிய பாதையை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி படைத்தது என்னும் வரலாறை உருவாக்கிட முதல்வர் முன்வர வேண்டும்.

இதற்கு, அவரும் அவருடைய அரசும் தயங்கினால் ஜல்லிக்கட்டுக்கான மெரீனா புரட்சியை முன்னெடுத்து வெற்றி கண்ட தமிழக இளைஞர்களும் பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் மதுவுக்கு எதிரான மக்கள் புரட்சியை முன்னெடுக்க வேண்டும்.

மது வருவாயால் ஏற்படும்  அரசுக்கான நிதி இழப்புகளை ஈடுகட்ட பொருளாதார வல்லுனர்கள் குழு அமைக்கவும், பூரண மதுவிலக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் சிறப்பு நிதி வழங்கவும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தர வேண்டும்.

ஆம்.. நம் கண் முன்னே  குடியால்  அழியும் தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க முதல்வருக்கு ஊக்கம் கொடுத்து உடன் நிற்க உறுதி கொள்வோம்.

அரசு இதற்கு தயங்கினால், மக்களை திரட்டி மதுவுக்கு முற்றுவைக்க மனத்திடம் கொள்வோம்.

மனித குலத்தை போதையில் இருந்து மீட்கும் முயற்சியும், அதற்கான தன்னெழுச்சி புரட்சியும் தமிழகத்தில்
தொடங்கட்டும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Share this story