அவதூறு பேச்சு வழக்கு.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..

By 
courthigh

கடந்த ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அண்ணாமலை பேசியிருந்தார். 

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

இது இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு தொடர்பாக, அண்ணாமலைக்கு சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அண்ணாமலை தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து  அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான  வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Share this story