ஹெலிகாப்டரில் அண்ணாமலை பணம் கொண்டு வந்தாரா? : தேர்தல் ஆணையம் பதில்

By 
heli9

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜ.க. இணை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர் கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்குச் சென்றார். அதில் அவர் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 17-ம் தேதி காலை ஹெலிகாப்டரில் உடுப்பிக்கு வந்தார். அவரது ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது. எந்த விதமான விதிமீறல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவர் அங்கிருந்து ஆசியன் ஓட்டலுக்கு காரில் சென்றார். அந்தக் காரில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி. குழுவினர் கூட்டாக சோதனை நடத்தினர். அதில் ஒரு பை இருந்தது. அதில் சோதனை நடத்தியதில் 2 ஜோடி உடைகள், குடிநீர் பாட்டில்கள் இருந்தது. அங்கும் எந்த விதிமீறலும் இருக்கவில்லை.

அதைத்தொடர்ந்து அண்ணாமலை காரில் காபு தொகுதிக்குச் சென்றார். அவரது கார் உதயவாரா சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக எதுவும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து காபு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார். அங்கும் அவரது கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போதும் ஒன்றும் கிடைக்கவில்லை.

அதை முடித்துக்கொண்டு அவர் மீண்டும் உடுப்பி ஆசியன் பியர்ஸ் ஓட்டலுக்கு வந்தார். அங்கு அவர் தங்கிய அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை. பின்னர் அவர் அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு சிக்கமகளூருவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதனால் அண்ணாமலை தங்கிய அறை மற்றும் பயணித்த ஹெலிகாப்டர், காரில் நடத்தப்பட்ட சோதனையிலும் எங்கும் விதிமீறல் இருக்கவில்லை என தெரிவித்துள்ளது. 

Share this story