தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

udhaya66

நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருமானவரி சோதனைகள் எப்போதும் நடப்பது தான். ஒவ்வொரு வருடமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல் தான் இப்போதும் நடக்கிறது. இந்த மாதிரி சோதனைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது.

இதுவரை நடந்த சோதனைகளில் யார் மீதாவது வழக்கு போடப்பட்டு உள்ளதா? யாரையாவது கைது செய்துள்ளார்களா? நடவடிக்கை எடுத்துள்ளார்களா? யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. என் மீது ஏதாவது எப்.ஐ.ஆர்.போட்டு இருக்கிறார்களா? எதுவும் இல்லையே. தி.மு.க.வை யாரும் வாழ்த்துவதில்லை. அவ்வப்போது குற்றச்சாட்டு தான் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வகுப்பு எடுப்பது போல் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் போய் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை பாதியில் நிறுத்தியதைப்பற்றி கேளுங்கள். அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பற்றி கேட்கிறீர்கள். அவர் பேசியதாகவே பல ஆடியோக்கள் வெளி வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story