நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கை? : சமூக ஆர்வலர் அ.திருமலை..

By 
erasai5

'மாநில கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு தலையிட்டால், அது மாநில சுயாட்சிக் கொள்கையை கேலிக் கூத்தாக்கும் செயல்' எனவும்,  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், அரசியல் ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான கவிஞர் அ.திருமலை  கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

'தமிழ் நாட்டில் மாணவ, மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் வாட்டி வதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய, திமுக ஆட்சி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடந்த 2021-ல் தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக 125 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து, 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது; மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
தமிழக அரசின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். ஆனால், ஜனாதிபதி, மசோதாக்கள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, தமிழக முதலமைச்சர் ஜனாதிபதியை சந்தித்து நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

ஒரு வாரத்தில் ஜனாதிபதி அனுமதி வழங்காவிட்டால், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்; சட்ட மன்றத்தில் எந்த ஒரு தீர்மானமும் 2 முறை நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதற்கு ஜனாதிபதி உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே, ஜனாதிபதி நீட் தேர்வு விதி விலக்கிற்கு அனுமதி அளிப்பதில் தாமதப்படுத்துவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ஜனாதிபதி அனுமதி வழங்கும் நிலை ஏற்பட்டால், அது அவரது பதவிக்கு பின்னடைவு என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சி மீது ஒன்றிய அரசு கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது;

இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்துவதில் பாஜக பெரும் ஊழல் செய்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். கல்விக் கொள்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதில் ஒன்றிய அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்றும் கடந்த கால அரசியல் வரலாறுகள் கூறுகின்றன. மாநில கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு தலையிட்டால், அது மாநில சுயாட்சிக் கொள்கையை கேலிக் கூத்தாக்கும் செயல் என்றே அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விதிவிலக்கு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

ஜனாதிபதி அவர்கள் தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வு விதி விலக்கு அளித்து உத்தரவிடுவாரா? அல்லது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப் போகிறாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என  சமூக ஆர்வலர் கவிஞர் அ.திருமலை தெரிவித்துள்ளார்.

Share this story