பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக.? : தேனி திருமலை அறிக்கை.. 

By 
erasai9

'பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக கூட்டணி இடம் பெறுவதன் மூலம், தமிழ் நாட்டு மக்களுக்கு திமுக ஆட்சியால் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும்' என அரசியல் ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

'திமுக எதிர்பார்த்தபடி பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், தேசிய அளவில் இந்தியா கூட்டணி போதுமான இடங்களில் வெற்றி பெறவில்லை. இதனால், இந்தியா கூட்டணியால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை.

எனவே, 2019-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் 39-க்கு 38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, கடந்த முறையும் மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாமல் போய் விட்டது. திமுக-வைப் பொறுத்தவரை, இதனைக் 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டது' என்றே சொல்லலாம்;

ஆனால், இம்முறை அப்படி இல்லை; இந்தியா கூட்டணியால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் அவர்களை விட்டுப் பிரிந்து, பாஜக ஆட்சிக்கு திமுக கூட்டணி ஆதரவு அளித்தால், அதைக் கூட்டணி தர்மத்தை மீறிய செயல் எனக் கூற முடியாது. ஏனெனில், இந்தியா கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிந்த பிறகு, மாநில மக்களின் நலன் கருதி பிரதமர் மோடிக்கு திமுக ஆதரவு அளித்தால், அதை எப்படி தவறு என்று கூற முடியும்?

இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்து, அதைவிட்டு திமுக கூட்டணி வெளியேறினால் அதைத் துரோகம் என்றோ சந்தர்ப்பவாதம் என்றோ சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், தற்போது திமுக கூட்டணி பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்தால் ,அதில் எந்தக் குறையும் யாராலும் சொல்ல முடியாது. அதைக் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

பாஜக ஏற்கனவே எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பதால், பாஜக தங்களோடு வருமாறு திமுக கூட்டணியை வரவேற்குமே தவிர, தவறாக எடுத்துக் கொள்ளாது என்பதே உண்மை. எனவே திமுக சற்று ஆற அமர யோசித்து பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் பாஜக அமைச்சரவையில் திமுக இடம் பெறுவதற்கான வழிமுறைகள் உருவாகும்.

எனவே, பாராளுமன்றத்தில் பாஜக ஆட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் போது, திமுக அதற்கு ஆதரவாக தனது வாக்குகளை அளிக்க வேண்டும். அதற்கு முன்னதாக திமுக, அதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

அதன் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசி, புதிய அமைச்சரவையில், திமுக கூட்டணி இடம் பெறுவதற்கான அமைச்சர்கள் பட்டியலைக் கேட்டுப் பெறுவார்கள்; அதன் பிறகு பிரதமர் மோடி அவர்களின் ஒப்புதலோடு திமுக கூட்டணி அமைச்சர்கள் பட்டியல் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பதற்கான சூழல் உருவாகும் என்று நம்பலாம்.

பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக கூட்டணி இடம் பெறுவதன் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு திமுக ஆட்சியால் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும்.

அதைவிட முக்கியமாக, வருகிற 2026-ல் நடைபெறும் சட்ட மன்றத் தேர்தலில், திமுக கூட்டணியும் பாஜக கூட்டணியும் இணைந்து போட்டியிட்டு, தமிழ் நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் தேடி வரும் என்பது மட்டும் உறுதி' என அரசியல் ஆய்வாளரும் சமூக ஆர்வலருமான தேனி திருமலை குறிப்பிட்டுள்ளார்.

Share this story