உண்மையை மறைக்கிறது தி.மு.க. அரசு : வானதி குற்றச்சாட்டு
 

vanathi2

டெல்டா பகுதியில் விளைநிலங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவு செய்துவிட்டாக தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டி உள்ளன. இதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

உண்மைகளை மறைத்து பேசுவதா என்று அவர் ஆவேசமாக கூறியதாவது:- டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது. நிலக்கரி எடுக்க சாத்தியக்கூறு உள்ள இடங்களாக வடசேரி, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய இடங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த 3 இடங்களுக்கும் விலக்கு கேட்டு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து மனு கொடுத்துள்ளார். விலக்கு கேட்பதில் நியாயம் உள்ளது. எந்தெந்த இடங்களில் நிலக்கரி படிமங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்பதை மத்திய அரசு ஆய்வு செய்யும்.

4.1.2011 அன்று மன்னார்குடி பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் ரூ.100 கோடி முதலீட்டில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கிரேட்டர் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் முதல்வரும் செயல் அதிகாரி ஒய்.கே. மோடி ஆகியோரோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அப்போது இது வேளாண் மண்டலம் என்று ஏன் சொல்லவில்லை? அது மட்டுமல்லாமல் ஒரு நிலத்தை கையகப்படுத்தும்போது, அதை அளவிடுவது, கையகப்படுத்துவது மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினருக்கு நன்றாக தெரியும். இவ்வளவு நடைமுறைகளும் இருந்தும் இந்த பகுதியில் தேவையில்லை என்று ஏன் சொல்லவில்லை? எப்படியாவது மோடியை எதிர்க்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று பேசுவது சரியல்ல. உண்மையை மறைத்து பழியை மத்திய அரசு மீது போடலாமா? உலக அளவில் பசுமை எரிசக்தியை உருவாக்குவதில் மோடி ஆர்வமாக இருக்கிறார்.

நிலக்கரி மூலம் மின்சாரம் தேவையில்லை என்றால் சூரிய மின் தயாரிப்பு, காற்றாலை மின் உற்பத்திக்கு எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன. எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்று பேசுவதும், அதற்காக முயற்சிப்பதும்தான் அரசின் சிறந்த அணுகுமுறையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story