40 தொகுதிகளிலும் திமுக+ முன்னிலை; விளவங்கோட்டில் காங். வெற்றி.! - தேர்தல் முடிவுகள் 2024

By 
40d

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

விளவங்கோட்டில் காங்கிரஸ் வெற்றி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி எம் எல்ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார்.

சவுமியா அன்புமணி தோல்வி: தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 3 லட்சத்து 89 ஆயிரத்து 837 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தோற்றுள்ளார். அவரைவிட திமுக வேட்பாளர் மணி 18,524 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.

பிரேமலதா தியானம்: விருதுநகரில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தீவிர தியானம் மேற்கொண்டார்.

மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து மகனின் வெற்றிக்காக விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், அவர் மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் பாஜக இரண்டாம் இடம்: 17 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் - 380504 வாக்குகளும் சரவணன் (அதிமுக) 178626 வாக்குகளும். இராம. சீனிவாசன் (பாஜக) 194170 பெற்றுள்ளனர். சு. வெங்கடேசன் 186334 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து பாஜக இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

அதேபோல், நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன், நீலகிரியில் எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 29 தொகுதிகளில் அதிமுக இரண்டாம் இடத்திலும், 10 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கனிமொழிக்கு வெற்றி முகம்: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். அவர் இரண்டாம் முறையாக மக்களவை உறுப்பினராகிறார்.

கோவையில் அண்ணாமலைக்கு தொடர் பின்னடைவு: கோவை மக்களவைத் தொகுதியில் 10-வது சுற்று முடிவின்படி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் -- 2,51,490 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக அண்ணாமலை 2,03,568 வாக்குகளும் , அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 1,05,234 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 36,050 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 5,360 வாக்குகள் பதிவாகியுள்ளன.

நீலகிரியில் ஆ.ராசா தொடந்து முன்னிலை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா 17-வது சுற்றில் 4,02,496 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 1,81,337 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 1,96,342 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 47,993 வாக்குகள் பெற்றுள்ளார். 17-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 2,06,154 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 11,021 வாக்குகள் பதிவானது.

திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இந்தத் தேர்தலில் கூடுதல் வித்தியாசத்துடன் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் பாஜகவுக்கு பின்னடைவு: புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 2வது சுற்று துவங்கிய நிலையில் 50 ஆயிரம் வாக்குகள் பாஜக பின்தங்கியுள்ளது.

தென் மாநிலங்களில் புதிய வீச்சை ஏற்படுத்துவோம் என்று பாஜக சூளுரைத்த நிலையில் தமிழகம், புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை நிலவரம் மிகுந்த கவனம் பெற்றது.

40-லும் திமுக: மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. காலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையிலும் அதே போக்கு நீடிக்கிறது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஸ்டாலின் வாழ்த்து: சட்டமன்ற தேர்தல் வெற்றியை ஒட்டி தெலுங்கு தேசம் தலைவர் நாயுடுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். அதில், “ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுகு தேசம் கட்சித் தலைவர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள்! தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும்!” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக தேர்தல் களம்: 2024 மக்களவைத் தேர்தல் களம்: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.

திமுக அணி: திமுக தலைமையிலான அணியில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

அதிமுக அணி: அதிமுக அணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இதில், அதிமுக 32 தொகுதிகளில் போட்டியிட, தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

பாஜக அணி: பாஜக தலைமையிலான அணியில் பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர்.

பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட்டது. அதோடு, இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் ஆகியோர் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டனர்.

அந்த வகையில், தமிழகத்தில் தாமரைச் சின்னம் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஓ. பன்னீர் செல்வம், சுயேட்சையாக போட்டியிட்டார்.

நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

Share this story