குறைந்தபட்ச கோரிக்கையை கூட திமுக நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

By 
ee4

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

'போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையை கூட இந்த அரசு நிறைவேற்ற வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி தொழிற்சங்கங்கள் பணிக்கு சென்றுள்ளனர்.

திமுக அரசு தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தான் தொழிலாளர்கள் கோரிக்கையை கேட்கின்றனர். ஆனால் இந்த திமுக அரசு நீதிமன்ற உத்தரவு மீறி உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.

22 ஆயிரம் பேருந்துகள் இருந்தது. தற்பொழுது 17 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. 5 ஆயிரம் பேருந்துகள் முழுமையாக பழுதாகி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மானிய கோரிக்கையின் பொழுது 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று கோரிக்கை கூறுகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாக. தொடர்ந்து மூன்று ஆண்டு காலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு பேருந்து கூட வாங்கவில்லை. இதுதான் இந்த ஆட்சியினுடைய அவலம்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் உடைந்த பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பேருந்துகளின் நிலைமை சிவகங்கையில் ஒரு ஓட்டுநர் பேருந்தை இயக்க முடியவில்லை என்று ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு சென்று பேருந்தை நிறுத்தி உள்ளார். அவர்களின் தேர்தல் அறிக்கையில் அனைத்து பகுதிகளுக்கும் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று அறிவித்தார்கள் ஆனால் தற்பொழுது குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே கட்டணமில்லாமல் செல்ல முடிகிறது.

கட்டணமில்லா பேருந்து குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்கனவே புரிந்துணர் ஒப்பந்தம் போடப்பட்டது எந்தெந்த நிறுவனங்கள் தொழிற்சாலையை துவங்கி உள்ளது, கட்டுமானங்கள் துவங்கி உள்ளன என்ற வெள்ளை அறிக்கை கேட்டேன்.

ஆனால் இதுவரை பதில் அளிக்கவில்லை. முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் 2015ம் ஆண்டு முதலீட்டார்கள் வரவேண்டும் என்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். அவர்கள் நடத்திய மாநாடு காரணமாக அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைத்தது. 

தொடர்ந்து 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட இதுவரை இந்த அரசு நிறைவேற்றவில்லை. விளம்பரத்திற்காக இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டதாக மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து மக்களுக்கு தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் பொதுமக்களுக்கு தெரியும். எந்தெந்த நிறுவனங்கள் தமிழகத்தில் வந்துள்ளது என்று தெரியும். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. தைப்பொங்கல் வருகின்ற பொழுது அனைத்து குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று நாங்கள் அறிவித்தோம். அந்த காலகட்டத்தில் எல்லா குடும்ப அட்டைக்கும் பொங்கல் தொகுப்புடன் 2500 ரூபாய் பணமும், முழு கரும்பும் வழங்கினோம்.

ஆனால் இந்த அரசு வெறும் பொங்கல் தொகுப்பை மட்டும் அறிவித்தார்கள். ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தனர். அதன் பிறகு நாங்கள் அறிக்கை விட்ட பிறகு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று சொன்னால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பம், ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்' என்றார்.

Share this story