'கண்டா வரச் சொல்லுங்க': அதிமுகவை ஓவர்டேக் செய்த திமுக..

By 
kanda4

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை என ஒருபக்கம் பணிகள் நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர். இதனால், தமிழக அரசியல் களம் களைகட்டியுள்ளது.

அந்த வகையில், திமுக கூட்டணியில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களை குறிக்கும் வகையில் அக்கட்சியை விமர்சித்து ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்று அதிமுகவினர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டினர்.

சமூக வலைத்தளங்களை தாண்டி, மக்களை நேரடியாக அணுக போஸ்டர்கள் பயன்படும் என்பதால், தமிழ்நாட்டின் உரிமையை திமுக எம்.பி.க்கள் எப்படி பறிகொடுத்தார்கள் என்பது உள்ளிட்ட மொத்த தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர் யுக்தியை கையில் எடுத்துள்ளதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுகவின் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பிரச்சாரத்தை ஓவர்டேக் செய்யும் வகையில், அதே தலைப்பில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், ‘பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை கண்டா வர சொல்லுங்க’ எனவும் ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை; கண்டா வர சொல்லுங்க’ எனவும் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், “பாஜகவை எதிர்ப்பது போல நடிக்க தெரிந்த கட்சிகளுக்கு முன்னுரிமை; கட்சியில் பத்து பேரோ ஒரே ஒருத்தரோ இருந்தால் கூட போதும்” என்பன உள்ளிட்டவைகள் தேவையான தகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Share this story