திமுகவின் மூன்றாண்டு சாதனை - சீமான் விமர்சனம்..

By 
seeman8

சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி இருப்பதே திமுகவின் 3 ஆண்டுகால சாதனை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியும், பொதுநல வழக்கு தொடர்ந்தும் போராடி வந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்து உள்ளது என்பது தெளிவாகிறது. திமுக ஆட்சியில் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து யாருமே கேள்வி எழுப்பக் கூடாது என்கிற நிலையே இருந்து வருகிறது. மீறி கேள்வி எழுப்பினால் பொய் வழக்கு புனைந்து துன்புறுத்துவதும், கூலிப்படையை ஏவி கொல்வதும்தான் திராவிட மாடல் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தான் திமுகவின் மூன்று ஆண்டுகால சாதனையாகும். எனவே திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை அரசு விரைந்து கைது செய்ய வேண்டும். இனியாவது மக்கள் உரிமைப் போராளிகள் தாக்கப்படுவது தொடராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share this story