இப்ப புரியுதா..'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, எடப்பாடி என்ற நபர்க்கு' : ஓபிஎஸ் தரப்பு விளாசல்

எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக அ.ம.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் மீது, அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ராஜேஸ்வரனும் தனியாக புகார் அளித்தார்.
அதில், 'எடப்பாடி பழனிசாமியுடன் வந்திருந்த அ.தி.மு.க.வினர் தன்னை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 393 ஐ.பி.சி. (செல்போனை பறித்தல்), 506-2 (கொலை மிரட்டல்), 328 (தாக்குதல்) , 294.பி (அவதூறாக பேசுதல்) என்பது உள்பட 7 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், 'தாக்குதலில் ஈடுபட்ட செந்தில்நாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்ய வேண்டும். தாக்குவதற்கு தூண்டிய எடப்பாடி பழனிச்சாமி மீதும் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நிலையில், சிவகங்கை நிகழ்வு குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கை வருமாறு :
'துரோகி' எடப்பாடியின் சிவகங்கை வருகை அவருக்கும், அவருக்கு பாடை தூக்கும் கும்பலுக்கும் சரியான பாடம் புகட்டியிருப்பதோடு, எச்சரிக்கை சமிக்ஞைகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறது.
ஆம், விமானத்திலேயே ராஜேஷ் என்கிற சிவகங்கை சீமைக்கார இளைஞன் ஒருவர், போடா.. துரோகி என்று எடப்பாடியை காறித்துப்பி வரவேற்க, எங்கள் வீரமிக்க மருதிருவர் நினைவிடத்துக்கு துரோகமே வடிவான எடப்பாடியே வராதே என தென்னாட்டு மக்கள் கட்சி திருப்பத்தூரில் முற்றுகை போர் நடத்த..
எடப்பாடியின் முகம் பொறித்த விளம்பரத் தட்டிகளை, பொதுமக்களே ஆங்காங்கே கிழித்தும் வெட்டியும் வீச.. மருது பாண்டியர் நினைவிடத்தில் எடப்பாடி முன்னிலையிலேயே அடிதடி கைகலப்பு நடக்க.. சிவகங்கை நகரத்தில் எடப்பாடியின் வருகைக்கு எதிராக நடந்த பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு எடப்பாடி கும்பலுக்கு வயிற்றில் புளியை கரைக்க..
சிவகங்கை நகரத்து வான்வெளியில் கருப்பு பலூன்கள், தியாகமே வடிவான எங்கள் வேலுநாச்சியார் மண்ணுக்குள், 'துரோகி எடப்பாடியே வராதே' என பேரிகை முழக்கம் எழுப்ப.. அவசரம் அவசரமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு கேட்டு, எடப்பாடி கும்பல் அழுது ஒப்பாரிக்க வைக்க...
ஒருவழியாக, பயந்து பயந்து நடுக்கத்தோடு பதுங்கி பதுங்கி காவல்துறையின் கைகளை பிடித்துக் கொண்டு வந்து கூலி கொடுத்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் கூட்டப்பட்ட கூட்டமோ பாதியிலேயே கலைந்து சென்றுவிட.. காலி சேர்கள் மத்தியில் புலம்பிவிட்டு போயிருக்கிறான் கொடநாட்டு கொலைகாரன்.
இப்ப புரியுதா..'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, எடப்பாடி என்ற நபர்க்கு' என்பதை..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்திருந்தார்.
*