எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது..! அண்ணாமலை விவகாரத்தில், தேர்தல் ஆணையம் அதிரடி..

By 
elec5

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வாக்காளர்களுக்கு 92.80 சதவீதம் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  நாளை மாலையுடன் பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி நிறைவடையும் என தெரிவித்தார். தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு நாளை கடைசி நாளாகும் என கூறினார்.

வருகிற 19ஆம் தேதி வாக்களிக்க வசதியாக தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை என்றால், ஊழியர்கள் 18 மற்றும் 19ஆம் தேதி புகார் கொடுக்கலாம் என்றும் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

1950 என்ற எண்ணுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாகவும், தான் பிரச்சாரம் செய்யவில்லை, மைக்கில் பேசவில்லை, வணக்கம் தான் தெரிவித்து சென்றேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளதற்கு பதில் அளித்த அவர், இரவு 10 மணிக்கு மேல் எந்த வகையிலும்  பிரச்சாரம் செய்யக் கூடாது என கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார். 18 ஆம்  தேதி மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவும் மையத்திற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நிறைவடையும் என தெரிவித்தார் வருகிற 17-ஆம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் எனவும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Share this story