போதைப்பொருள் விவகாரம்: திமுக அரசு மீது, எடப்பாடி பழனிசாமி  கடும் குற்றச்சாட்டு..

By 
sall

தமிழகத்தில் திமுக-வினரே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதால் தான், அதனை தடுக்க முடியவில்லை. போலீஸாரால் எவரையும் கைது செய்யவும் முடியவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் தாதகாப்பட்டியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது:

அதிமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்காக, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் கொண்டு வந்தோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அத்திட்டத்தை ரத்து செய்துவிட்டனர்.

சேலத்தில் மட்டும் ரூ.1,000 கோடியில் சீர்மிகு நகரத் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம், ஆசியாவில் பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா என பல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. சேலத்துக்கு பஸ் போர்ட் திட்டத்துக்காக, இடம் கொடுத்தோம். அதனையும் நிறைவேற்றவில்லை.

திமுக-வினர் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வரும் அவர்கள், எந்த திட்டத்தை செய்ததாக, பொதுக்கூட்டத்தில் பேச முடியும். 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது திமுக விட்டுச் சென்ற ரூ.1.14 லட்சம் கோடியுடன் தான் ஜெயலலிதா ஆட்சியைத் தொடங்கினார். 10 ஆண்டுகாலம் அதிமுக சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது. இன்றைக்கு திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இந்தியாவின் அதிக கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாகிவிட்டது.

ஊழல் செய்வதிலும் தமிழகம் முதலிடத்துக்கு வந்துவிட்டது. நீதிபதிகள் தாமாக முன்வந்து, திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கின்றனர். நாளைக்கும் (26-ம் தேதி) ஒரு அமைச்சர் மீதான வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது. அதிமுக ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி ஊழல் செய்துவிட்டதாக, திமுக-வினர் என்மீது வழக்கு தொடர்ந்தனர்.

பின்னர் வழக்கை வாபஸ் வாங்குவதாக நீதிமன்றத்தில் கூறினர். ஆனால், வழக்கை நடத்த வேண்டும், என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளனர் என்று நீதிமன்றத்தில் கூறினேன். இப்போது, வழக்கில் என்னை நிரபராதி என்று நிரூபித்துள்ளேன். ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக, ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை சந்திக்க வேண்டியது தானே, ஆனால், வழக்கில் இருந்து வாய்தா மேல் வாய்தா வாங்குகிறார்கள். துணிவு இருந்தால் அவர்கள் வழக்கை சந்திக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், பிரச்சினைகளை தீர்க்க 52 குழுக்கள் அமைத்தனர். தமிழகத்தின் நிதி நிலையை சரி செய்வதற்கும் ஒரு குழு அமைத்தனர். ஆனால், தமிழகத்தின் கடன் ரூ.3.58 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. கடன் வாங்குவதில் தான் குழு வேலை செய்துள்ளது. இதனால், திமுக அரசை குழு அரசு என்றே அழைக்கலாம். கடந்த 4 பட்ஜெட்டுகளிலும், புதியதாக 2,300 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று தொடர்ந்து அறிவிக்கின்றனர் . ஆனால், 100 பேருந்துகள் மட்டுமே வாங்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் 15,000 பேருந்துகள் வாங்கப்பட்டன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. மாணவர்கள் போதை கலாச்சாரத்துக்கு அடிமையாகி வருகின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காக, திமுக நிர்வாகி ஒருவரை இப்போது கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திமுக-வினர் போதைப்பொருள் விற்பதால் தான் அதனை தடுக்க முடியவில்லை. போலீஸாரால் கைது செய்யவும் முடியவில்லை.

காவிரி பிரச்சினைக்காக, அதிமுக எம்பி.-க்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். ஆனால், திமுக அக்கறையில்லாமல் செயல்பட்டதால், மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அறிக்கையை, நீர்வள ஆணையர் மத்திய கமிஷனுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, அணை கட்டினால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும். எனவே, காவிரி பிரச்சினையில் திமுக அரசு உச்ச நீதிமன்றம் சென்று, மேகேதாட்டு அணைக்கு தடை பெற வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் 523 அறிவிப்புகளை கொடுத்தது. அவற்றில் 98 சதவீதம் அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டதாக, ஸ்டாலின் பொய் பேசுகிறார். நீட் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை உயர்வு, கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்ப்பது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என எந்த அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், டீசல் விலை குறைக்கப்படாததால், லாரிகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று டீசல் வாங்குவதால், தமிழகத்துக்கான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம், நிர்வாகம் சரியாக இல்லாதது தான்.

அதிமுக ஆட்சியின்போது, 2011- 2019-ம் ஆண்டு காலத்தில் 37 எம்பிக்கள் தமிழக பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் 16,619 கேள்விகளை எழுப்பினர். திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 9,695 கேள்விகளை மட்டுமே எழுப்பினர். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றால், தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும். வளமான தமிழகம் உருவாக்கப்படும் என்றார்.

Share this story