எப்புடி.. இப்புடி, எடப்பாடி? : மருது அழகுராஜ் அதிரடி கேள்வி 

By 
marudhu127

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித் தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் மனுதாரர்களின் வக்கீல்கள் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார்.

அதன்படி, இந்த வழக்கு அவசர வழக்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் பரபரப்பான வாதங்களை முன் வைத்தனர். 

இதையடுத்து, நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில்... 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது. அதற்கு தடை விதிக்கிறேன். 

இந்த வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22-ந்தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும். 2 வழக்குகளிலும் 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும். எனவே 24-ந்தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என  கூறியிருந்தார். 

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ள கருத்து வருமாறு :

எடப்பாடி விரும்பும் தீர்ப்புகள்.. ஏறத்தாழ அவர் விரும்பும் நேரத்தில், அவர் விரும்பும் வடிவத்தில் வருகிறது.

ஆனால், எடப்பாடியை அச்சுறுத்தும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முதல்,  ஊழல் முறைகேடுகள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் கோமா நிலையிலேயே அசைவற்று கிடக்கிறதே எப்புடி.. இப்புடி.?' என குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story