எடப்பாடியா ஏர்வாடியா : மருது அழகுராஜ் எச்சரிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
'எடப்பாடி என்கிற ஒரு தனிநபரின் பதவிப்பித்துக்காக ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்புமை அற்ற இயக்கத்தையே பலி கொடுப்போம் என எந்த பைத்தியக்காரனாவது கருதினால்,
அவர்களை முற்றிலுமாக துடைத்து வீசிவிட்டு, கழகமே உலகமென வாழும் தொண்டர்கள் கை கோர்த்து ஒன்றிணைவார்கள் என்பது நிச்சயம்.
அதற்கு பிறகு, எடப்பாடியும் அவரது பல லட்சம் கோடிகளுக்கு பல்லக்குத் தூக்கும் பைத்தியக்காரர்களும் ஏர்வாடிக்குத்தான் போக வேண்டியிருக்குமே தவிர, கனவிலும் அவர்களால் புனித ஜார்ஜ் கோட்டைப் பக்கமோ அல்லது, தலைநகர் செங்கோட்டையின் திசைக்கோ தலை காட்டவே முடியாது என்பது சத்தியம்.
எனவே, எடப்பாடி முக்கியமா அல்லது இயக்கம் பெரிதா என்னும் வினாவுக்கு அவர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
எண்ணிக்கை பெரிதாகிய கெளரவர்கள் தோற்றதும், குறைவான எண்ணிக்கை கொண்ட பாண்டவர்கள் வென்றதும் தருமத்தின் அடிப்படையில் மட்டுமே என்கிற மகாபாரதப்போர் குறித்த பொதுஅறிவும் பொதுவாகவே அறிவும் இல்லாத 'சேக்கிழார்?' பழனிச்சாமியை சேர்ந்தவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பாகும் .
இதனை, அவர்கள் தவற விடுவார்களேயானால் தொண்டர்களின் ஆதரவு இழந்து அவர்கள் அரசியல் அனாதை ஆவது உறுதி.
எனவே, இந்த அவர்களது முடிவில் மட்டுமே அவர்களுக்கான விடிவும் முடிவும் அடங்கி இருக்கிறது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.