தேர்தல் களம்: அதிமுக கூட்டணியில் தமாகா?

By 
gkv2

கடந்த முறை அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த தமாகா இந்த முறை யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. ஆனால், பாஜகவுடன் தான் தமாகா செல்ல அதிக வாய்ப்புள்ளதாக  கூறப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய இடைக்கால பட்ஜெட்டை ஜி.கே.வாசன் வரவேற்றார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துள்ள சம்பவம் பாஜகவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்பு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.  திமுக பொறுத்த வரையில் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக திடீரென அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனையடுத்து அதிமுகவும், பாஜகவும் தங்களது தலைமையில் கூட்டணி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

கடந்த முறை அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த தமாகா இந்த முறை யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. ஆனால், பாஜகவுடன் தான் தமாகா செல்ல அதிக வாய்ப்புள்ளதாக  கூறப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய இடைக்கால பட்ஜெட்டை ஜி.கே.வாசன் வரவேற்றார். 

இந்நிலையில்  திடீர் திருப்பமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவெளி சாலையில் உள்ள இல்லத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இதனால் அதிமுக கூட்டணியில் தமாகா இணைகிறதா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்: தேர்தல், கூட்டணி என்பதை நானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தான் பேசி முடிவு எடுக்க முடியும். எனவே நட்பு ரீதியான சந்திப்பை திசை திருப்ப வேண்டாம் என கூறியுள்ளார். 

Share this story