தேர்தல் முடிவுகள் 2024: பாஜக கூட்டணி 290+, இண்டியா 220+ இடங்களில் முன்னிலை..

By 
mrrm

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் சூழலில் 3 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்குதலுடன் கூடிய வெற்றியையே பெறும் என்பது தெரிகிறது.

இதற்கிடையில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், இன்று மாலை பாஜகவும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி அட்சி அமைக்க ஏதுவாக இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உடனும் பேசியுள்ளார்.

இத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் கடும் போட்டி: 80 மக்களவை தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசம் மக்களவை தேர்தல் வெற்றியை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் உ.பி.யில் பாஜக 70+ இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறிய நிலையில் அங்கே சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி பாஜகவுக்கு கடும் சவால் விடுத்து வருகிறது.

தேர்தல் ஆணைய இணையத்தில் 3 மணிக்கு பகிரப்பட்ட தகவலின்படி உ.பி.யில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி முறையே 35 மற்றும் 7 இடங்களிலும், பாஜக 34 தொகுதிகளிலும், பிற கட்சிகள் இரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கூட டெல்லி, பிஹார், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் என இந்தி இதய மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான போக்கே நிலவுகிறது. மேற்குவங்கத்தில் திரிணமூல் - பாஜக இடையே கடும் சவால் நீடித்த நிலையில் தற்போது திரிணமூல் காங்கிரஸ் 30, பாஜக 10, காங்கிரஸ் -1 மற்றும் இதர கட்சிகள் 1 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

உ.பி.க்கு அடுத்தபடியாக இண்டியா கூட்டணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. அங்கு மொத்தம் 48 மக்களவை தொகுதிகள். கடந்த 2019ல் இங்கு 41 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கட்சி பிடித்தது. அதன் பின்னர் நடந்த சலசலப்புகளில் சிவ சேனா இரண்டாக உடைந்தது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து இண்டியா கூட்டணிக்கு சாதகமான போக்கு நிலவுகிறது. பகல் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் - 11, பாஜக - 11, சிவ சேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) - 11, தேசியவாத காங்கிரஸ் – சரத்பவார் - 8 தொகுதிகளில் என முன்னிலை நிலவரம் உள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இந்தமுறையும் பாஜக தனித்து கால்பதிக்க முடியவில்லை. நெல்லை, கோவை, தருமபுரி என நம்பிக்கை தொகுதிகள் அறியப்பட்டாலும் கூட தருமபுரியில் மட்டுமே பாஜக சோபிக்கிறது. அங்கும் கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

கேரளாவில் பாஜக கணக்கை தொடங்கியுள்ளது. திரிச்சூரில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று இருக்கிறார். அதேபோல் திருவனந்தபுரத்திலும் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருடன் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூருக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில் சசி தரூர் 4வது முறையாக வெற்றி பெற்றார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்த பாஜக, சட்டப்பேரவை, மக்களவை என இரண்டு தேர்தல்களிலும் அமோக வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடு மத்தியில் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளில் பாஜக 25 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் பாஜக கூட்டணி 17 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

ஜனநாயகத் திருவிழா: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

Share this story