41,695 பேருக்கு வேலைவாய்ப்பு : முதல்வர் ஸ்டாலின், தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

Employment for 41,695 people Chief Stalin, contract with companies

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் 'ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில், ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முதலீடுகள் ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டங்கள் :

இந்த முதலீடுகள் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இ-காமர்ஸ் தளங்களில் பயிற்சி அளித்து, அந்த நிறுவனங்களை பேசிய சந்தைகளுக்கு மட்டுமின்றி, உலகளாவிய சந்தைகளுக்கும் தயார் செய்திடும் திட்டத்திற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் எம்.டி.ஐ.பி.பி. நிறுவனம் பிலிப்கார்ட், வால்மார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஜெர்மனி நாட்டுக்கு இடையே முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் போன்றவற்றுக்காக இணைந்து செயல்படும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் எம்-டி.ஐ.பி.பி. நிறுவனம் இந்தோ-ஜெர்மன் சேம்பர் ஆப் காமர்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் சிறப்பு அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

2030-ம் வருடத்திற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்திட அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

இதற்காக, ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பன்முகப்படுத்துதல் என்று இரு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

25% மானியம் :

மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்றுமதியை மேற்கொள்ளும் வகையில், மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 இடங்களில் பொருளாதார வேலைவாய்ப்பு பகுதிகள் உருவாக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்றுமதி அதிகமாக மேற்கொள்ளும் பகுதிகளில், ஏற்றுமதி தொடர்பான பொதுவான உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படும் என்றும், இதற்காக மாநிலத்தில் 10 ஏற்றுமதி பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், ஒரு ஏற்றுமதி மையத்திற்கு தலா 10 கோடி ரூபாய் என்ற அளவில் 25 சதவீத மானியம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் மதிப்பு கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, தொகுப்பு சலுகைகள் வழங்கவும் ஒரு திட்டம் வடிவமைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

முதல்வர் வெளியிட்டார் :

நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதியாளர்களின் கையேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அந்த கையேட்டில் பல்வேறு ஏற்றுமதி அனுமதிகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான செயல்முறைகள் பற்றிய விரிவான தகவல்கள் எளிமையாகவும், சுருக்கமாகவும் வழங்கப்பட்டு இருந்தது.

பொன்னேரி அருகில் உள்ள வயலூரில், 240 ஏக்கர் பரப்பளவில் பாலிமர் தொழிற்சாலைகளுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், முதல் 2 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பருத்தி பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்படும் ஒரு சதவீத சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என்று நெசவாளர்கள், தொழில் முனைவோர், நூற்பாலைகள், பஞ்சு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

நுழைவு வரி ரத்து :

இதை நிறைவேற்றும் வகையில், ஒரு சதவீத சந்தை நுழைவு வரியை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து காட்டன் கார்ப்பரே‌ஷன் ஆப் இந்தியா தற்போது தமிழ்நாட்டில் பஞ்சு கிடங்குகள் அமைத்திட முன் வந்துள்ளன. 

இதற்கான ஆணைகளை, காட்டன் கார்ப்பரே‌ஷன் ஆப் இந்தியா தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வழங்கினார்.

முன்னதாக, 21 ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பங்கேற்ற ஏற்றுமதி கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த ஏற்றுமதி கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை காட்சிப்படுத்திய 42 கண்காட்சி அரங்குகள் இடம்பெற்று இருந்தன. 

இது தவிர ஆன்லைன் மூலம் ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர் குறியீடு (ஐ.இ.சி.) எடுக்க விரும்புவோருக்கு அங்கேயே பதிவு செய்யும் வகையில் கண்காட்சி அரங்கில் ஒரு பதிவுக்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது.

Share this story