தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை புகார்..

By 
infor

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது.

மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வந்தவர் அங்கித் திவாரி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த சமயத்தில், மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மருத்துவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், முடித்து வைக்கப்பட்ட மேற்கண்ட வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், அக்டொப்பர் 30ஆம் தேதியன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மதுரைக்குச் சென்றபோது அவரது காரில் அங்கித் திவாரி ஏறியிருக்கிறார். அதன் பிறகு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி அரசு மருத்துவர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார். அதன்பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத் தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால்,  சந்தேகமடைந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு, கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இவ்வாறு செய்தது அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள், இரண்டாவது தவணையாக ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அங்கித் திவாரியை கைது செய்தனர். லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த பணத்தை அரசு மருத்துவர்கள் அங்கித் திவாரியிடம் கொடுத்த போது, கையும் களவுமாக அவர் பிடிபட்டார்.

தொடர்ந்து, மதுரையில் உள்ள அங்கித் திவாரியின் வீடு, தபால்தந்தி நகரில் உள்ள மலாக்கத் துறை துணை மண்டல அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முன்னதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அங்கித் திவாரி அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது குறித்து புகார் தெரிவித்து தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபியிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் மதுரை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி 35 பேர் காவல்துறை என்று சொல்லிக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்ததாக தமது கடிதத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. வழக்குக்கு தொடர்பில்லாத மிக ரகசியமான ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share this story