இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டது செல்லும் : சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

By 
aiadmk2

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வாசித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-

ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்கிறது. எனவே அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லும்.

அந்த கூட்டத்தில் அ. தி. மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் சரியானதுதான். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பு மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றி கிடைத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இறுதி வெற்றியை பெற்று உள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. முழுமை பெற்று உள்ளது.

அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கைவசம் ஆகி உள்ளது. அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் இனி எடப்பாடி பழனிசாமி மட்டுமே தலைவர் என்ற நிலை உருவாகிறது.

அதே சமயத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்து செல்வாக்குடன் திகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்துக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Share this story