ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு

By 
ee1

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் ஏற்கனவே விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மஞ்சள் பையும் வழங்கப்பட்டது. தேர்தலில் தற்காலிகமாக அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டன. 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனுமதி பெற்று 4 பணிமனைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு தொகுதியில் இருக்கும் பணிமனைகள் அனைத்தும் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன.

இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று போலீசாருக்கான தபால் ஓட்டு பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 58 போலீசார் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வரும் 25-ந் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு பிறகு ஈரோட்டில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்காக வந்திருக்கும் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

அன்று மாலை 5 மணிக்கு மேல் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோட்டில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள். அப்போது யாரேனும் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story