ஈரோடு தேர்தல் களம் : ஓபிஎஸ் தரப்பு உறுதி

'ஈரோட்டு மக்கள், தங்கள் ஒருவிரல் புரட்சியால் உயர்வு தந்து ஊக்கமளிப்பார்கள் என்பது நிச்சயம்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, 'கரன்சி மலையும் சதிவலையும்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
ஒருவரிடம் மிதமிஞ்சிய பணம் குவிந்து கிடக்கிறது என்பதற்காக அவர் முன்னெடுக்கும் அதர்மத்திற்கு கூச்சமில்லாமல் முட்டுக்கொடுக்கும் ஆதாயச் சூதாடிகள் ஒரு பக்கம்...
நேர்மைக்கு மாறாக நடப்பவர் ஆயினும், அவர் தன் சாதிக்காரர் என்பதற்காக முகத்துக்கு நேராக ஒரு மாதிரியாகவும், முதுகுக்கு பின்னால் வேறுமாதிரியாகவும் நடிக்கிற சதிவலைக்காரர்கள் மறுபக்கம்..
சகித்துக் கொண்டு போனால் மட்டுமே, சகாயம் கிடைக்கும் என்பதை நிலைப்பாடாக கொண்ட நடைப் பிணங்கள் இன்னொரு பக்கம் என..
ஒரு மும்முனை தாக்குதலை எதிர்கொள்ளும் சமகால அரசியலில் அதிக பட்ச உத்தமத்தனத்தை கொண்டிருக்கும் ஓ.பி.எஸ். நம்புவது,
கழகமே உலகமென வாழும் தொண்டர்களையும்.. கடைக் கோடி மக்களின் இறுதி நம்பிக்கையான
மாட்சிமை மிக்க நீதிமன்றங்களையும்..மேதகு தேர்தல் ஆணையத்தையும்..ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களாகிய பொது மக்களையும் மட்டுமே.
அந்த நம்பிக்கைக்கு ஈரோட்டு மக்கள், தங்கள் ஒருவிரல் புரட்சியால் உயர்வு தந்து ஊக்கமளிப்பார்கள் என்பது நிச்சயம்.
இந்நிலையில், 'ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. பலமுறை வெற்றி பெற்றிருக்கிறது. அதனால, அவர்கள் போட்டியிடுவது தான் வாய்ப்பாக மாறும்' என அண்ணாமலை கூறியிருப்பது மிகச் சரி.
அதே போல, தமிழ்நாட்டையும் அ.தி.மு.க.- தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான், அரை நூற்றாண்டு காலங்களுக்கு மேலாக ஆட்சி நடத்தி வருகிறது.
அதனால, கழகங்கள் இல்லா தமிழகம் என்னும் உங்கள் கனவுகளையும் கைவிட்டுருங்க.
அதே போல, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதியில் பா.ஜ.க. ஜெயிக்கும்னு கற்பனைக்கும் ஒவ்வாத வகையில் கனா காண்பதையும் கைவிட்ருங்க.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.