இழுக்குக்கு விடை சொல்லும் ஈரோட்டு கிழக்கு :  மருது அழகுராஜ்

By 
marudhu109

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஒரு திராவிட பேரியக்கத்தின் முப்பத்து மூன்று வருட தலைமையால், அடையாளம் காட்டப்பட்ட விசுவாசமிக்க ஒருவரை முன்னாள் முதல்வரை காரணமே இல்லாமல் நீக்கிவிட்டு, கட்சியை கைப்பற்றிக் கொள்ள ஒரு அபகரிப்பு ஆசாமி அலைவதும்...

அதனை நடத்தி முடிக்க, ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் நீதிபதி தொடங்கி  ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி வரை மேற்படி முறையற்ற செயலுக்கு  அடி வேலை பார்ப்பதும்..

இதனை தவறு என சொல்வதற்குக்கூட, தைரியம் இல்லாது பதவி பணத்துக்காக நிர்வாகிகளெல்லாம் புலன் பொத்திக் கொண்டு வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடாகும்.

மேலும்..கட்சியை திருடப் பார்ப்பவர் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி என்பதால், நேற்று வரை அந்த ஆக்ரமிப்பு பேர்வழியை கொலைகாரன் கொள்ளைக்காரன் என்றெல்லாம் விமர்சனம் செய்து வந்த வாய் வாடகைக்காரனெல்லாம்.. 

இப்போது எடப்பாடிதான் அண்ணா தி.மு.க.வை மட்டுமல்ல அமெரிக்காவையே வழிநடத்தும் அளவுக்கு வல்லமை படைத்தவர் என  ஒவ்வொரு ஊடகத் திண்ணைகளுக்கும் சென்று கதாகலாட்சேபம் நடத்துவதும்.. 

முறைகேட்டுக் காரனது வாசலுக்கே சென்று முறைவாசல் செய்வதும் பரிதாபமே.

இவை யாவிற்கும் மேலாக சட்டம் நீதி உள்ளிட்ட சகலமாடங்களும், கட்சியின் நிறுவனர் வகுத்திட்ட விதிகளுக்கு மாறான செயல்களை ஆமோதிப்பது அருவருப்பான அப்பட்டமான ஒரு ஜனநாயக படுகொலையாகும்.

ஆக.. தொண்டர்களின் உரிமையை பறிக்கும் சர்வாதிகாரத்திற்கு அங்கீகாரம் தருகிற வகையில் நீதிமன்றங்களின் தொடர் தீர்ப்புகளும் விரும்பும் வேகத்தில் விரும்பும் விதத்தில் அபகரிப்பு சக்திகளுக்கு சாத்தியமாகும்  வாய்ப்புகளும், நீதி தருமம் இவற்றின் மீதான கடைசி நம்பிக்கையையும் அடியோடு தகர்த்து வருகிறது.

ஆனாலும், இதனை எல்லாம் உற்று கவனித்து வரும் தொண்டர்களும் மக்களும் தக்க பாடம் கற்பிக்க ஆயத்தமாகி விட்டனர்.

இதன் துவக்கமாக ஈரோட்டு கிழக்கு தொகுதியின் தீர்ப்பு அமையும் என்பது சத்தியம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 


 

Share this story