அதை' ஆழத்தில் போய் விட்டு விட்டு வந்தாலும், நீருக்கு மேலே வந்துதான் தீரும் : 'துரோகி' என்ற வார்த்தைக்கு மருது அழகுராஜ் விளக்கம்
*

எடப்பாடியின் துரோகம் குறித்து, இளைஞன் ஒருவர் கேள்வி எழுப்பியது..
'அவரது பயணத்தின் சுமூகத்தை கெடுப்பதாக அவர் உணர்ந்தால், ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் என்ன செய்திருக்க வேண்டும்.
விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அதை செய்யாமல் அல்லக் கைகளை ஏவி விட்டு, ஒரு இளைஞனை இரண்டு மூன்று தடிமாட்டுக் கும்பல் தாக்கியிருக்கிறது. இது சட்டத்தை கையில் எடுக்கிற சண்டியர்தனமாகும்.
இதனை செய்த நபர்களில் ஒருவர் சிவகங்கை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் என்பவர்.
இவர் ஐந்தாண்டு காலம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பெஞ்ச் தேய்த்த பெருந்தகை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னொருவர், அரசு அதிகாரி ஒருவரது தற்கொலைக்கு காரணமானவர் என அம்மாவால் அமைச்சர் பதவியில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்ட அக்ரி. கிருஷ்ணமூர்த்தி யின் மகன் மணிகண்டன் ஆவார்.
இது போக, மூன்றாவது அடியாளாக செயல்பட்டது எடப்பாடியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியான கிருஷ்ணன் என்பவர். இந்த மூன்று பேரும் சேர்ந்து எடப்பாடியின் உத்தரவின் பேரிலேயே அந்த இளைஞன் ராஜேஷை தாக்கியிருக்கின்றனர். தாக்குதல் நடத்தியதற்கான வீடியோ பதிவுகள் வெளியாகியிருக்கிறது. வேண்டுமானால், விமான நிலையத்திடம் கூடுதல் சி.சி.டி.வி பதிவுகளை காவல்துறை கேட்டுப் பெறலாம்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான இளைஞன் ராஜேஷ் தன்னைத் தாக்கி ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டதாக புகார் அளித்திருக்கிறார். எனவே, காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட செந்தில்நாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்ய வேண்டும். தாக்குவதற்கு தூண்டிய எடப்பாடி பழனிச்சாமி மீதும் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களை நோக்கி, பொதுமக்கள் கேள்வி எழுப்பும்போது அதனை சாதுர்யத்தோடு அணுகுபவன்தான் சரியான தலைவன்.
அதற்கு மாறாக, தன்னை விமர்சித்தால் விமான நிலையம் போன்ற பன்னாட்டு பயணிகள் வந்து போகும் பொதுஇடம் என்பதைக் கூட உணராமல், ஒரு முன்னாள் முதலமைச்சரும் அவரது சகாக்களும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதும், ஈடுபடத் தூண்டுவதும் எவ்வகையில் நியாயமாகும்.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த ஆளின் கரத்தில்தான், தமிழகத்தின் அரசு நிர்வாகமும் குறிப்பாக காவல்துறையும் நான்கரை வருடங்கள் இருந்திருக்கிறது என்றால், அதை நினைத்து வெட்கி தலைகுனியத்தான் வேண்டும்.
அது சரி, இளைஞன் ஒருவன் 'துரோகி' என உண்மையை சொன்னதற்காக தாக்குதல் நடத்திய சகிப்புத்தன்மையற்ற இந்த மடத்தனக்கூட்டம்.. இதோ குழந்தையும் சொல்கிறதே "துரோகி பழனிச்சாமி" என்று.! இதற்கு எடப்பாடியின் அல்லக்கைகள் என்ன செய்வார்களாம்.?
ஆக, ஆழத்தில் போய் அதை விட்டு விட்டு வந்தாலும், அது நீருக்கு மேலே வந்துதான் தீரும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
*