எல்லாம் நன்மைக்கே : ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை பேச்சு

o.panneer1

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், அதிமுக பொதுக்குழு வழக்கு, இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? என பரபரப்பாக இயங்கிய வந்த தமிழக அரசியில் சூழலில், தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரியும், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம்.

வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்து பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுப்பலாம். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்திடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்கலாம் என்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் தரப்பினர், இது எங்களுக்கான வெற்றி தான், இந்த உத்தரவு இபிஎஸ் தரப்புக்குத்தான் பின்னடைவு என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், இபிஎஸ் தரப்பினர் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறைந்த கால அவசாசமே உள்ளதால், பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் மூலம், பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், "எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே" என்று ஒற்றை வரியில் பதில் அளித்து விட்டு சென்றார்.

Share this story