முன்னாள் முதல்வர் காங்கிரஸில் இருந்து விலகல்: என்ன காரணம்?

By 
asok

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல், மாநிலத் தேர்தலை மகாராஷ்டிர மாநிலம் இன்னும் ஒரு சில மாதங்களில் எதிர்கொள்ளவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக அம்மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவில் இணையும் பொருட்டு அவர், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை  உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இணையும் பட்சத்தில் அவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் அசோக் சவான், தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடுத்த பெரிய தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதும், அவர் பாஜகவில் இணையுவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான பாபா சித்திக் அக்கட்சியில் இருந்து விலகி, இந்த மாத தொடக்கத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் கவனிக்கத்தக்கது.

பாஜக தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸிடம், அசோக் சவான் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர், அசோக் சவானைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்தி பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், காங்கிரஸில் இருந்து பல நல்ல தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர் என்பதுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸில் இருந்து பெரிய தலைவர்கள் பாஜகவில் சேருவார்கள் என நான் நினைக்கிறேன்.” என்றார்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் நானா படோலுடன் அசோக் சவானுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் கட்சியில் இருந்து விலகியிருக்கலாம் என காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஷங்கர்ராவ் சவானின் மகனான, அசோக் சவானுக்கு நான்டெட் பகுதியில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அவரது இந்த மாற்றம் வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Share this story